‘சிறகடிக்க ஆசை’ நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்ய காரணம்? அப்போ நடந்தது இதுதான்! நடிகர் பழனியப்பன் உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்த சீரியலில் அருணின் அம்மாவாக நடித்த நடிகை ராஜேஸ்வரி திடீரென உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி, சின்னத்திரை உலகையே உலுக்கியது.
சமீப காலமாக தான் இந்த சீரியலின் மூலம் ராஜேஸ்வரிக்கு தனி அடையாளமும், பாராட்டும் கிடைக்க தொடங்கியிருந்தது. கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பேசப்படத் தொடங்கிய வேளையில், அவர் எடுத்துக் கொண்ட அந்த துயரமான முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "இப்போது தான் அவருக்கு நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன, அதற்குள் இப்படியொரு முடிவா?" என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக எழுந்தது.

மகளின் விழா
ராஜேஸ்வரியின் வாழ்க்கையில் கடைசி நாட்கள் மிக முக்கியமான நாட்களாக இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய மகளின் பூப்புனித நீராட்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருந்தார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த தருணம் வர இருக்க, அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், குடும்பத்தாரை மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகினரையும் மனவேதனையில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துகள் பரவத் தொடங்கின. ஒரு தரப்பு, "குடும்ப சூழ்நிலை காரணமாக மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம்" என்று கூறினர். மற்றொரு தரப்பு, "சீரியல் வேலையில் ஏதாவது பிரச்சனை இருந்ததா?" என்ற சந்தேகத்தையும் எழுப்பினர். ஆனால் இதற்கான உறுதியான காரணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
ராஜேஸ்வரியை பற்றி மனம் திறந்த பழனியப்பன்
இந்நிலையில், 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்துவின் நண்பன் செல்வம் என்ற கேரக்டரில் நடித்துவரும் நடிகர் பழனியப்பன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஜேஸ்வரியைப் பற்றி உருக்கமாக பேசினார்.
அவர் கூறுகையில், "ராஜேஸ்வரி எனக்கு முன்பே நன்கு தெரிந்தவர். நாங்கள் இருவரும் பல சீரியல்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். 'சிறகடிக்க ஆசை' சீரியலில் கூட சேர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்தோம். எப்போதும் பாசிட்டிவாக பேசக்கூடியவர். அவருக்குள் இப்படியொரு வலி இருந்திருக்கும் என்று யாருமே நினைக்க முடியாது" என்றார்.
மேலும் அவர், "அவர்கள் எடுத்த முடிவுக்கு காரணம் குடும்பத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அது என்ன பிரச்சனை என்பது எனக்கே தெரியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் இப்படியொரு முடிவை எடுப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை" என்று மனவேதனையுடன் கூறினார்.

சீரியலில் நடந்த காட்சியால் மன வருத்தம்
ராஜேஸ்வரியின் மறைவுக்குப் பிறகு, சீரியலில் அவரது கதாபாத்திரத்தை முடிக்க ஒரு காட்சி அமைக்கப்பட்டது. அதில், செல்வம் (பழனியப்பன்) காரில் மோதி விபத்து ஏற்படுத்தி ராஜேஸ்வரியின் கேரக்டர் உயிரிழப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டன.
இதுபற்றி பேசும் போது, "நிஜ வாழ்க்கையில் ஒரு நண்பரை இழந்த துயரத்தோடு இருக்கிறேன். ஆனால் திரையில் அவரை விபத்தில் கொன்றவன் போல காட்சி அமைக்கப்பட்டதை பார்க்க மனம் வலித்தது. அது என்னை மிகவும் பாதித்தது" என்று பழனியப்பன் கூறினார்.
மேலும் அவர் கூறிய ஒரு விஷயம் பலரையும் நெகிழ வைத்தது. "ராஜேஸ்வரி இறந்த செய்தி தெரிந்ததும், முதலில் அவரை பார்க்க சென்றவர்களில் நானும் ஒருவன். அவருடைய உடலுக்கு முதலில் மாலை அணிவித்ததும் நான்தான். ஆனால் சீரியலில் என்னால் அவருக்கு மரியாதை செலுத்தும் காட்சி எதிலும் பங்கேற்க முடியவில்லை. ஏனென்றால் கதையின் படி நான் அவரை விபத்தில் கொன்றவன். அதனால் போலீஸ் என்னை கைது செய்வது போல காட்சி அமைத்திருந்தார்கள். அந்த சூழ்நிலை எனக்கு உள்ளுக்குள் பெரிய வலியை கொடுத்தது" என்றார்.












Click it and Unblock the Notifications