மறைந்த நா. முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரைத்துறையினர் கொடுத்த பிரம்மாண்ட வீடு! அதன் மதிப்பு இத்தனை லட்சமா?
சென்னை: நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, "ஆனந்த யாழை" எனும் இசை நிகழ்ச்சி கடந்த 19ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நா. முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது நா. முத்துக்குமாரனின் கும்ப குடும்பத்திற்கு திரை பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து புதிய வீடு கட்டி கொடுத்து இருக்கின்றனர்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நா. முத்துக்குமார், பின்னர் பாடலாசிரியராக புகழ் பெற்றார். சீமான் இயக்கிய "வீரநடை" திரைப்படத்தில் முதன்முறையாக பாடல் எழுதி தனது பயணத்தை தொடங்கினார். தனது எளிமையான வரிகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் "காதல் கொண்டேன்" திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

மனதில் நிற்கும் பாடல்கள்
"காதல் கொண்டேன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "தேவதையை கண்டேன்", "தொட்டு தொட்டு போகும் தென்றல்", "உன்னை தோழி என்பதா", "நெஞ்சோடு கலந்திடு உறவாலே" போன்ற பாடல்கள் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். இந்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதன் பிறகு, அவர் தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியான பாடலாசிரியராக மாறினார். அனைத்து இயக்குனர்களும் தங்கள் படங்களில் நா. முத்துக்குமாரை பாடல்கள் எழுத வைத்தனர்.
நா முத்துக்குமார் எழுதிய வரிகள்
எளிமையே அவரது மிகப்பெரிய சொத்தாக இருந்தது. வாய்ப்புகள் குவிந்தபோதும், அவர் எந்தவித தலைக்கனமும் இல்லாமல் எளிமையாக இருந்தார். தனது பாடல் வரிகளையும் எளிமையாகவே கொடுத்தார். இதன் விளைவாக, அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையை சுமார் பத்து வருடங்கள் வரை தக்கவைத்துக்கொண்டார். ரசிகர்கள் அவரை தங்கள் ஆதர்ச கவிஞராகவும், பாடலாசிரியராகவும் கொண்டாடினர்.
நா முத்துக்குமார் மறைவு
துரதிர்ஷ்டவசமாக, நா. முத்துக்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் வருத்தப்பட்டனர். அவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
குடும்பம்
நா. முத்துக்குமார் மறைந்து 9 வருடங்கள் ஆகவுள்ள நிலையில், அவரது 50வது பிறந்தநாள் ஜூலை 12ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு "ஆனந்த யாழை" என்ற இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அவர் தமிழ் சினிமாவுக்கு செய்த பங்களிப்பிற்காக நன்றிக் கடன் செலுத்தும் விதமாக அவரது குடும்பத்தினருக்கு கௌரவம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திரை பிரபலங்கள் கொடுத்த பரிசு
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நா. முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டது. சிவகார்த்திகேயன் அந்த வீட்டின் சாவியை ஜீவலட்சுமி, ஆதவன், மகாலட்சுமி ஆகியோரிடம் வழங்கினார். ஏ.எல்.விஜய், ராம், வசந்தபாலன், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற காரணமாக இருந்தனர்.
நா முத்துக்குமார் வீட்டின் விலை
தங்களுடன் பணியாற்றி மறைந்த ஒரு கலைஞரை மறக்காமல், அவரது குடும்பத்திற்கு இத்தனை வருடங்கள் கழித்தும் உதவி செய்த தமிழ் திரையுலகிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பத்து லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், முத்துக்குமாருக்கு வழங்கப்பட்ட வீட்டின் விலை 66 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அதுபோல சிவகார்த்திகேயன் தான் எழுதிய முதல் பாடலுக்கு வாங்கிய சம்பளத்தையும் நா. முத்துக்குமாரன் குடும்பத்திற்கு தான் கொடுத்திருக்கிறார். அது குறித்து உருக்கமாக சிவகார்த்திகேயன் பேசிய பேட்டிகளும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications