சாவு வீட்டில் மேட்டிமை? "மன்னன்" விஜய்க்கு மக்களை தேடி போன ரஜினிகாந்த்தை தெரியுமா? ஜன நாயகன் பிரஷர்
சென்னை: தன்னுடைய ஜன நாயகன் படத்திற்கான புரமோஷன்கள் நின்று போயிருப்பதால், கரூர் மக்களை வரவழைத்து தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசியிருப்பதாக விமர்சகரும், எழுத்தாளருமான ராஜ கம்பீரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதை இங்கு விரிவாக பார்ப்போம்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் ராஜகம்பீரன், "மக்களை நோக்கிதான் தலைவன் வரவேண்டும் என்பதுதான் தேர்தல் ஜனநாயகம்.. எல்லாவற்றிற்கும் தலைமையை நோக்கி செல்வதன் பெயர் சர்வாதிகாரம்.. அது மன்னராட்சி.

பேரரசர் - மன்னன் - விஜய்
மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் மன்னனுக்கு கிடையாது. அப்படியே ஏதாவது தேவைப்பட்டால், ஒற்றர்கள் மூலம் அறிந்துகொள்வார்.. ஆனால், திமுகவில் வாரிசு அரசியல் நடப்பதால், அந்த மன்னராட்சியை வீழ்த்தவே தான் வந்திருப்பதாக சொன்ன விஜய், இன்று மாபெரும் பேரரசர் போல நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது.
இதுவரை தமிழக அரசியல், தமிழக பண்பாட்டில் நடக்காத விஷயம் இப்போது நடந்துள்ளது.. பணம் கொடுக்கக்கூடிய வசதி இருக்கும் ஒரே காரணத்தினால், சாவு விழுந்த வீட்டிலுள்ளவர்களை வரவழைப்பது என்பது பணத்திமிரையே காட்டுகிறது.
ஜன நாயகன் பிரஷர்
எத்தனையோ நிகழ்வுகளுக்கு திடீரென சொல்லாமல் கொள்ளாமல் போயிருக்கிறார் விஜய்.. சமீபத்தில்கூட திருப்புவனம் இளைஞர் மரணத்துக்கு திடீரென்றுதான் போனார்.. எங்கு போனாலும் கூட்டம் வருகிறதே என்று நினைத்தால், விஜய் எப்படி ஜனநாயக சக்தியாக திகழ முடியும். இப்படிப்பட்ட சூழலில்தான் ஜனநாயகன் படத்தை, பொங்கலுக்கு வெளியிட வேண்டிய அவசியம் அவருக்கு எழுந்துள்ளது..
அந்த படத்தின் புரமோஷனை துவங்குவதற்கும், தன்னுடைய வியாபாரத்தை நடத்துவதற்கும் கரூர் துயர சம்பவம் தடையாக விஜய்க்கு உள்ளது.. எனவேதான் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை தந்து, அவர்களை வரவழைத்து பேசிவிட்டால் இந்த பிரச்சனை இத்துடன் தீர்ந்துவிடும் என்று நினைத்துள்ளார்..
தன்னுடைய பட புரமோஷனுக்கு தடை இருப்பதால்தான், அவர்களை சந்தித்து பேசியிருக்கிறார் என்று பிஆர் வேலையை பார்ப்பவர்கள் கருத்து கூறுகிறார்கள்.
ரஜினிகாந்த் நினைவிருக்கா
கரூர் சம்பவத்தால் தூக்கமின்றி விஜய் தவித்து வந்ததால்தான், அம்மக்களை இப்படி தனிப்பட்ட முறையில் அழைத்து சந்தித்ததாக காரணம் சொல்கிறார்கள்..
ஆனால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தபோது, நேரடியாகவே ரஜினிகாந்த் சென்றிருந்தார்.. பொதுமக்களை தீவிரவாதிகள் போலவும், சமூகவிரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்றும், அரசுக்கு ஆதரவாகவும் அவர் அப்போது பேசியிருந்த கருத்துக்களில் நமக்கு உடன்பாடில்லை. ஆனால் ஸ்பாட்டுக்கு போயிருந்தார்.. அதற்காக ரஜினிகாந்த் செல்வாக்கு இல்லாதவர் என்று அர்த்தமா?
இப்படி ஒரு களத்துக்கு பிரபலமானவர்கள் செல்வது என்பது தமிழகத்துக்கு முதல்முறையா? விஜய்யைவிட வசீகரம் மிக்கவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், எல்லாருமே களத்தில் இறங்கியிருக்கிறார்கள்..
ஜெயலலிதாவை விடவா
ஜெயலலிதாவை கட்சியில் இணைத்து கொண்டால், அவர் போகும் இடங்களில் கூட்டம் வரும் என்பதற்காகவே அவரை அதிமுகவில் சேர்த்தார்கள்..
ஜெயலலிதாவும் கட்சியில் இணைந்து பல நிகழ்வுகளுக்கு செல்லவில்லையா? பல தலைவர்களை சந்திக்கவில்லையா? எனவே கூட்ட நெரிசல் என்பது பிரச்சனையல்ல.. கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தெரியவில்லை, கூட்டத்தை வழிநடத்த தெரியவில்லை என்பதை விஜய்யே ஒப்புக் கொண்டதுபோலதான், அவரது நடவடிக்கைகள் உள்ளன.
மனித வாழ்க்கையில் சாவு விழாத வீடுகளே கிடையாது.. அந்தவகையில் விஜய் வீட்டில் ஏதாவது துயரம் நடந்து, அவரிடம் துக்கம் விசாரிக்க யாராவது வா என்று அழைத்தால் விஜய் செல்வாரா? நியாயத்தை சொல்லட்டும்.
மாமல்லபுரத்தில் அவர்களை சந்திப்பதன் நோக்கமே, தனக்கு எதிராக அந்த மக்கள் வாய் திறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்..
மேட்டிமை காட்டும் நபர்
கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் செய்த சதித் திட்டத்தினால்தான் இத்தனை பேரும் இறந்தார்கள் என்று தவெகவில் சொல்கிறார்கள்.. அது உண்மையானால், விஜய் எதுக்கு 20 லட்சம் நிவாரணம், நிதியை தர வேண்டும்? தனக்கு எதிராக யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காகவே பணம் வழங்கப்பட்டுள்ளது.. சந்திப்பு நடந்துள்ளது.
விஜய் பக்குவப்பட்ட நபரே கிடையாது.. தான் யார் தெரியுமா? எவ்வளவு பெரிய ஆள் தெரியும்? என்ற மேட்டிமையை காட்டுவதற்கு சாவு வீடுகள்தான் இவருக்கு கிடைத்ததா?" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications