’ஜூஸ் சேலஞ்ச்’ பேசிப் பேசியே தீர்த்து கட்ட ப்ளான்! 3 மாதமா ஒத்திகை பார்த்த கீரிஷ்மா! ஷாக்கான போலீஸ்
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் ஜூஸில் விஷத்தை கலந்து காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று மாதங்களாக ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் காதலனை கொலை செய்ய கொலையாளி கீரிஷ்மா திட்டம் தீட்டியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் பாடசாலை அருகே முறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞரான ஷாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தான் சந்தேகிப்பதாக அவரது தந்தையான ஜெயராமன் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

அதிர்ச்சி சம்பவம்
மேலும் அவரை குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்தது குமரி மாவட்டம் பளுகல் ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கீரிஷ்மா என்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட ஷரோன் ராஜும் கீரிஷ்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட கிரீஷ்மா ஷாரோனுக்கு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது .இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பெரும் பரபரப்பு
இந்நிலையில் இது தொடர்பாக கீரிஷ்மா கைது செய்யப்பட்டார். மேலும் வீட்டில் இருந்த ஆதாரங்களை அழித்ததாக கீரிஷ்மாவின் தாய் சிந்து, உறவினர் நிர்மல் குமார் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர், மேலும் கொலை குற்றத்தை கீரிஷ்மாவும் ஒப்புக்கொண்ட நிலையில் போலீசார் கொலை நடந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற போது தற்கொலைக்கு முயன்றார். இதை அடுத்து கிரீஷ்மாவின் உறவினர்களை சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

நடித்துக் காட்டிய கீரிஷ்மா
அப்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட விஷ பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த வீட்டுக்கு காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து தடயங்களை அழிக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று கீரிஷ்மாவை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். குளிர்பானத்தில் ஷாரோன் ராஜுக்கு விஷம் கொடுத்தது எப்படி என கீரிஷ்மா நடித்துக் காட்டிய நிலையில் அதனை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

ஜூஸ் சேலஞ்ச்
கொலை நடந்த வீட்டில் இருந்த குளிர்பானம், உணவு சாப்பிட்ட தட்டு உள்ளிட்டவற்றை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரை கொலை செய்ய மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு பல இடங்களுக்கு சுற்றுலா சென்றதாகவும் அப்போது ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கலந்து கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications