பிணங்களை விற்று கோடி கணக்கில் வருவாய் ஈட்டிய கேரள அரசு.. இது என்ன புதுசா இருக்கே.. என்ன மேட்டர்
திருவனந்தபுரம்: கேரள அரசு சடலங்களை விற்றே பல கோடி ரூபாயைச் சம்பாதித்து இருக்கிறது. அது எப்படி இந்தளவுக்குச் சம்பாதித்தது.. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் மருத்துவ படிப்பிற்கு எப்போதும் தனி மவுசு இருக்கவே செய்கிறது. முதல் பட்டதாரியாக வரும் பெரும்பாலானோர் இங்கே மருத்துவம் படித்து டாக்டர் ஆகவே விரும்புகிறார்கள். அதற்கேற்ப இங்கே தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது.

அதேநேரம் நமது நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்குப் புதுவித சிக்கல் ஒன்று எப்போதும் இருக்கும். அதாவது மருத்துவக் கல்லூரியில் சொல்லிக் கொடுக்க தேவையான சடலங்கள் எப்போதும் போதியளவுக்கு இருக்காது.
கேரள அரசு: இதற்கிடையே இந்த விஷயத்தைக் கையில் எடுத்த கேரள அரசு, இதன் மூலமாகவே வருவாய் ஈட்ட ஆரம்பித்துவிட்டது. உரிமை கோரப்படாத அல்லது அடையாளம் காணப்படாத சடலங்கள் கேரள அரசுக்கு வருவாய் ஆதாரமாக மாறிவிட்டது. உரிமை கோரப்படாத 1,122 உடல்களைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் ஒப்படைத்ததன் மூலம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கேரள அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
பொதுவாக மருத்துவ மாணவர்கள் கல்வி கற்கச் சடலங்கள் பயன்படும். ஆனால், நமது நாட்டில் இதற்காகச் சடலங்களைத் தர யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இதனால் மருத்துவக் கல்லூரிகள் பாடம் நடத்தச் சடலங்கள் கிடைக்காமல் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். இந்தச் சூழலில் தான் கேரள அரசு அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் கேரள அரசிடம் இருந்தே உடல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
சடலங்கள் விற்பனை: அரசு மருத்துவமனைகளில் இருந்து உரிமை கோரப்படாத இறந்த உடல்களைத் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்க அனுமதி அளிக்கும் ஆணையைக் கேரள அரசு கடந்த 2008ஆம் ஆண்டு பிறப்பித்தது. அந்த ஆணையின்படியே இப்போது சடலங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் எர்ணாகுளம் பொது மருத்துவமனை தான் அதிகபட்ச உடல்களைக் கொடுத்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் அந்த ஒரு மருத்துவமனை மட்டும் 599 உடல்களை ஒப்படைத்துள்ளது.
அடுத்து பரியாரம் மருத்துவக் கல்லூரி 166 உடல்களை ஒப்படைத்துள்ள நிலையில், திருச்சூர் மருத்துவக் கல்லூரி 157 உடல்களையும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 99 உடல்களையும் ஒப்படைத்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. கேரள அரசு எம்பாமிங் செய்யப்பட்ட உடல்கள் 40,000 ரூபாய்க்கும், எம்பாமிங் செய்யாத உடல்கள் 20,000 ரூபாய்க்கும் விற்பது குறிப்பிடத்தக்கது.
ரூல்ஸ் என்ன: 2000-களின் தொடக்கத்தில்தான் கேரளாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆய்வு நோக்கத்திற்காக அதிகமான சடலங்கள் தேவைப்படுகின்றன. 60 மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் படிப்புக்காக 5 உடல்களாவது இருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதாவது மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒவ்வொரு 12 மாணவர்களுக்கும் ஒரு சடலம் தேவைப்படும்.
ஆனால், நமது நாட்டில் இந்தளவுக்கு யாரும் படிப்பிற்காகச் சடலங்களைத் தர முன்வருவதில்லை. இதன் காரணமாகவே கேரள அரசு இந்த புதிய திட்டத்தைக் கையில் எடுத்தது. இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான சடலங்களும் கிடைக்கும். அதேபோல அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications