"இதை" வன்புணர்வாக எடுத்துக்கொள்ள முடியாது.. பலாத்கார வழக்கில்.. கேரள உயர்நீதிமன்றம் பரபர கருத்து
திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தற்போது கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தங்களுடன் பாலுறவு கொள்ளும் ஆண் திருமணமானவர் என ஏற்கெனவே சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தெரிந்திருப்பின் அது பாலியல் பலாத்கார குற்றமாக கருதப்படாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணை
கேரளாவை சேர்ந்த 33 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தன்மீது பாலியல் பலாத்கார வழக்கை காவல்துறை பதிந்துள்ளது என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கௌசர் எடப்பகத் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் கடந்த 2010 முதல் 2019 வரை மனுதாரர் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் உடலுறவு வைத்திருந்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.

எஃஐஆர்
ஆனால் இடையில் மனுதாரருக்கு வேறு ஒரு பெண்ணுடன் 2014ல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனாலும் இருவரும் பாலுறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறு இருக்க 2019ல் இவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இக்காலகட்டதில் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து ரூ.15 லட்சம் வரை பணமும் 5 சவரன் வரை நகையும் அந்த இளைஞர் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

காதல்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த வழக்கு குறித்து விசாரணையில் அந்த இளைஞருக்கு ஏற்கெனவே திருமணமானது சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு தெரிந்த பின்னரும் 5 ஆண்டுகள் வரை அவர் அந்த ஆணுடன் பாலுறவில் நீடித்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்கையில், அப்பெண் உறவை தொடர்வதற்கான காரணம் ஆணின் மீதுள்ள காதல் அல்லது பேரார்வம் மட்டுமேதான் தவிர, அந்த ஆண் கொடுத்த திருமண வாக்குறுதி அல்ல என்று நீதிபதி கூறினார்.

எஃப்ஐஆர் ரத்து
மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை சம்பந்தப்பட்ட ஆண் திரும்பப் பெற்ற பின்னர் மீண்டும் அவர்கள் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது ஐபிசி பிரிவு 376 இன் கீழ் பாலியல் பலாத்கார குற்றமாக கருதப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து மனுத்தாக்கல் செய்த இளைஞர் மீது பதிவுசெய்யப்பட்ட IPC பிரிவுகள் 406, 420 மற்றும் 376 கொண்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications