கால்பந்து போட்டிக்கு நடுவே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை! தப்பிய இளைஞரை மடக்கிப்பிடித்த போலீஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடந்தபோதே இரவு நேர பாதுகாப்பு
பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் அத்துமீறி சில்மிஷம் செய்து ஓடிய நபரை போலீசார் விரட்டி சென்று அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் போன்று கால்பந்துக்காக இந்தியவாில் இந்தியன் சூப்பர் லீக் எனும் ஐஎஸ்எல் போட்டி நடைபெற்று வருகிறது.
கேரளாவில் நேற்று முன்தினம் இரவு கேரளா பிளாஸ்டர்ஸ்- ஏடிகே மோகன் பாகன் அணிக்கு இடையே போட்டி நடந்தது. கலூர் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் போட்டி நடந்தது.

கேரளா இளைஞர்
இந்த போட்டியை கேரளா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ரசித்தனர். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. இந்த போட்டியை கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கஞ்சிக்குழியை சேர்ந்தவரும், பெங்களூரில் வசித்து வருபவருமான அருண் எம் தாமஸ் (வயது 35) பார்த்து ரசித்தார்.

பெண் போலீசிடம் சில்மிஷம்
இந்த வேளையில் அருண் எம் தாமஸ், மைதானத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் அவர் சில்மிஷம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்தரங்க உறுப்புகளை தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அவரை திட்டி பிடிக்க முயன்றார். அப்போது அவரது கைகளை இறுக்கமாக பிடித்து திருக்கிவிட்டு அருண் எம் தாமஸ் அங்கிருந்து ஓடினார்.

மடக்கி பிடித்த போலீசார்
இதனை பார்த்த பிற போலீசார் விரட்டி சென்று அருண் எம் தாமஸை விரட்டி சென்று பிடித்தனர். மேலும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் எம் தாமஸ் கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (பெண்ணை அடக்கி தாக்குதல்), 353A (உடல் தொடர்பு சார்ந்த பாலியல் தூண்டடலில் ஈடுபடுதல்), 332 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

துரதிர்ஷ்டவசமானது
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிர்ச்சியில் உள்ளார். கொச்சியில் கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இல்லை. முதல் முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இத்தகைய சம்பவங்கள் நடக்காது. பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி கால்பந்து போட்டிகளை பார்க்க மைதானத்துக்கு வரலாம்'' என்றார்.

நீண்டநேர பணியா?
இதற்கிடையே தான் இன்னொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஐஎஸ்எல் போட்டிகளின்போது பெண் போலீஸ்கள் அதிக நேரம் பணியமர்த்தப்படுகின்றனர். இதனால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உள்ளன என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் தற்போது பெண் போலீசிடம் சில்மிஷத்தில் ஒருவர் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications