ஆடி ஏ4 காரில் வந்து கீரை விற்ற 'காஸ்ட்லி' விவசாயி.. இணையத்தில் பரவும் வீடியோ!
திருவனந்தபுரம்: ஆடி ஏ4 ரக சொகுசு காரில் வந்து இறங்கி, சாலையோரம் கீரைக்கட்டுகளை விற்ற விவசாயியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாவிலும் பிரபலமாக இருக்கும் அந்த விவசாயி குறித்து இங்கே பார்க்கலாம்.
'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது' என்று நம்மூரில் பழமொழி உண்டு. விவசாயிகள் படும் கஷ்டத்தையும் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பது இல்லை. இது நம் கண்கூடாக பார்க்கும் விஷயமாகவே இன்றளவும் உள்ளது. பருவமழை சரிவர பெய்யாதது, வறட்சியான சூழல், அல்லது பருவம் தவறிய மழை என்ன பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்டுதான் விவசாயிகள் தங்கள் பயிர் விளைச்சலை செய்ய வேண்டியுள்ளது.

இப்படி எத்தனையோ சவால்களை கடந்து விவசாய பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது எல்லாதுறைகளிலும் புதுமை வந்து விட்டது. நவீன தொழில்நுட்பத்தில் வாயிலாக அனைத்து துறைகளும் பலமடங்கு மாற்றம் கண்டு விட்டது. இதற்கு விவாசய துறையும் விதி விலக்கு அல்ல. மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரிடுதல், வறட்சி பகுதிகளில் வறட்சியை தாங்கும் பயிர்களை விளைவித்தல் என சில புது யுக்திகளை கையாண்டால் விவசாயத்துறையிலும் பல மடங்கு லாபம் ஈட்டலாம் என்பது பல்வேறு தரப்பினரும் சொல்லும் கருத்தாக உள்ளது.
சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம்.. கேரளாவை சேர்ந்த சுஜித் (வயது 36) என்ற இளைஞர் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள பயிர்கள் மற்றும் தான் எப்படி விவசாயத்தால் நல்ல வருவாய் ஈட்டினேன் என்பது குறித்து எல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஜித் பதிவிட்டு வருகிறார். கேரளாவில் மிகவும் பிரபலமான யூடியூபராகவும் இருக்கும் சுஜித், மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர்தான் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சாலையோர வெஜிடபிள் மார்க்கெட் ஒன்றில் கீரைகளை விற்பனை செய்த சுஜித், இதற்காக தனது ஆடி காரில் வந்ததுதான் இணையத்தில் இந்த வீடியோ டிரெண்ட் ஆக காரணம். ரூ. 44 லட்சம் மதிப்பு கொண்ட ஆடி ஏ4 ரக செடான் காரில் வந்த சுஜித், தனது தோட்டத்தில் வளர்ந்த கீரைகளை ஷேர் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து சாலையோரம் கடையை போட்டு விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்.
சிறிது நேரத்திலேயே அவர் கொண்டு வந்த கீரைக்கட்டுகள் எல்லாம் விற்று போகிறது. கீரைக்கட்டுகள் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை சட்டைப்பையில் திணித்தபடி சுஜித், தான் அந்த ஆடி காரிலே புறப்பட்டு செல்கிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் சுஜித் பகிர்ந்து இருக்கும் வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவின் பணக்கார விவசாயி இவர்தான் என்று சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் சில நெட்டிசன்களோ.... ஆடி காரே வாங்கும் அளவுக்கு வசதி வந்துவிட்டாலும் கூட இன்னமும் சாலையோரம் போய் கீரைக்கட்டுகளை விற்பனை செய்யும் அவரது எளிமை அற்புதம் என பாராட்டி வருகின்றனர். ரூ.44 லட்சம் முதல் 52 லட்சம் வரை மதிப்பு கொண்ட ஆடி ஏ4 காரை சுஜித், செக்கண்ட் ஹேண்ட் காராக வாங்கியிருக்கிறார்.
கேப் டிரைவராக இருந்த சுஜித், விவசாயத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராம். விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் குத்தகைக்கு நிலத்தை எடுத்து அதில் பல்வேறு புதுமைகளுடன் பயிர்களை விதைத்துள்ளார். இதனால், விவசாய தொழில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலாமனவர்களில் ஒருவராக இருக்கும் சுஜித் விவசாயம் மட்டும் இன்றி கார் பயணம் குறித்த வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications