ஓணம் பண்டிகை: சிறப்பாக கொண்டாடுங்க.. அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்த கேரள அரசு!
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், கேரளாவில் அரசு துறை ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகம் மற்றும் கேரளாவில் கொண்டாடப்படும் ஓர் பண்டிகை ஓணம். குறிப்பாக கேரளாவில் ஓணம் பண்டிகை 10 நாட்கள் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் இந்த ஓணம் பண்டிகை மலையாள வருடப்பிறப்பாக கருதப்படுகிறது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

10 நாட்கள் கொண்டாட்டம்
மலையாள ஆண்டின் தொடக்க மாதமான சிங்கம் மாதத்தில், ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் ஆரம்பித்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களும் கேரள மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து கடவுள் வழிபாட்டில் ஈடுபடுவர். குறிப்பாக கசவு என்று சொல்லக்கூடும் வெண்ணிற ஆடையினை உடுத்திக்கொள்வர். மேலும் இந்த 10 நாட்களும் பெண்கள் இந்த வெண்ணிற ஆடை அணிந்து கைகொட்டுக்கிளி நடனம் ஆடுவது அழகாக இருக்கும். மேலும் வீட்டு முத்ததில், 10 நாட்களும் தொடர்ந்து அத்தப்பூக்கள் கொண்டு கோலங்கள் இடுவது கண்களை கவரும் விதத்தில் இருக்கும்.

64 வகை உணவுகள்
இதேபோல் ஓணம் பண்டிகை நாட்களில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். மேலும் ஓணம் பண்டிகையையொட்டி, அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி என 64 வகையான உணவு வகைகளை சமைத்து வழிபட்டு உண்பதும் வழக்கம். இதேபோல் அந்நாட்களில் கயிறு இழுத்தல், களறி, படகு போட்டிகள் நடைபெறும்.

4 ஆயிரம் போனஸ்
கேரள மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அங்கு அரசு விடுமுறைகளும் விடப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கூட செப்டம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள அரசு, ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், கேரளாவில் அரசு துறை ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

13 லட்சம் ஊழியர்களுக்கு கிடைக்கும்
அரசு அறிவித்த போனஸ் அறிவிப்பு பொருந்தாத அரசு ஊழியர்களுக்கு ரூ. 2, 750- சிறப்பு பண்டிகை கால அலவன்ஸ் ஆக வழங்கப்படும் என்றும் கேரள நிதி அமைச்சர் கேஎன். பாலகோபால் தெரிவித்துள்ளார். கேரள அரசின் இந்த அறிவிப்பு மூலம், அரசுத்துறையில் பணியாற்றும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும். பென்ஷன்தாரர்கள் மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பண்டிகை கால அலவன்ஸ் ஆக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 6 ஆயிரம் முன்பணம்
அதேபோல், பண்டிகை கால முன்பணமாக அரசுதுறை ஊழியர்கள் அனைவரும் ரூ 20 ஆயிரம் முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள், தங்கள் சம்பளத்தில் ரூ 6 ஆயிரம் முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications