ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போச்சே.. மூதாட்டியிடம் நகைப் பறித்த திருடனுக்கு மறக்க முடியாத ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே பட்டப்பகலில் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த மூதாட்டியிடம் தங்க நகை என்று நினைத்து கவரிங் நகையை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்கூட்டியில் வந்து வழிகேட்பது போல் நாடகமிட்டு நகையை பறித்து சென்ற நிலையில் கடைசியில் இது கவரிங் நகைகள் என்று தெரியவந்திருக்கிறது. இதனால் தன் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போனதப்பா என்று வேதனையுடன் ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.
சமீப நாட்களாகவே நகைப்பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்து அடிக்கடி நகைப்பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. போலீசாரும் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டு இவற்றை கண்காணித்தாலும், அவர்கள் கண்களில் படாதவாறு இத்தகைய செயல்களை திட்டம் தீட்டி அரங்கேற்றி வருகிறார்கள்.

அப்படித்தான் கேரள மாநிலம் கண்ணூர் அருகே சாலையில் பட்டப்பகலில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை வழிமறித்து வழி கேட்பது போல் ஏமாற்றி அவர் அணிந்திருந்த கவரிங் நகையை தங்க நகை என நினைத்து ஸ்கூட்டியில் வந்த நபர் பறித்து சென்றார். நகையை பறிக்கும் முயற்சியின் போது மூதாட்டி கீழே விழுந்து லேசான காயமும் அடைந்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளா கண்ணூர் அருகே பண்ணேன்பாரா என்ற ஊரை சேர்ந்தவர் மூதாட்டி மேரி (வயது 72). மூதாட்டி மேரி சம்பவத்தன்று கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்தார். வெயில் கொளுத்தி எடுத்ததால், குடையை பிடித்தப்படி நடந்து வந்துகொண்டிருந்தார். மூதாட்டி தனியாக வருவதையும், அவர் கழுத்தில் பெரிய செயின் இருப்பதையும் ஆசாமி ஒருவர் நோட்டமிட்டுள்ளார்.
இதனால் எப்படியாவது மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக யாரும் இல்லாத நேரம் பார்த்து ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணிந்தபடி மூதாட்டி அருகே சென்று நின்றார். அப்போது அவரிடம் இந்த இடத்திற்கு எப்படி போகவேண்டும் என்று கேட்பது போல் ஆக்ஷன் காட்டியுள்ளார். இதில் ஒரு நிமிடம் யோசித்த மூதாட்டியிடம், கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை பறித்தார்.
இதில் நிலைதடுமாறி மேரி கிழே விழுந்தார். நகைப்பறிப்பின் போது கீழே விழுந்ததில் மூதாட்டி லேசான காயம் அடைந்தார். உடனே அங்கிருந்து செல்ல முயன்றபோது மூதாட்டி மேரி ஸ்கூட்டியை பிடித்து இழுத்தார். எனினும் அந்த ஆசாமி சர்ரென அங்கிருந்து தப்பி சென்றார். மூதாட்டி அணிந்திருந்தது தங்க நகை கிடையாது. கவரிங் தானாம். எனினும் இதுகுறித்து மேரி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த கண்ணூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாலையோரம் இருந்த சிசிடிவி காட்சியில், நகைப்பறிப்பு சம்பவ வீடியோ தெளிவாக பதிவாகியிருந்தது. அந்த ஸ்கூட்டியின் பதிவு எண்ணும் தெளிவாக தெரிந்தது. இதையடுத்து போலீசார் நகைப்பறிப்பு ஆசாமியை கண்டுபிடித்தனர். அவர் பெயர் இப்ராகிம் (41) என்பதும், இதேபோன்று பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
போலீசார் நம்மை பிடிக்க வருகிறார்கள் என்று தெரிந்துகொண்டு ரயிலில் வெளியூர் தப்பி செல்ல முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர். மூதாட்டி மேரியிடம் பறித்த கவரிங் நகையையும் பறிமுதல் செய்து மேரியிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து இப்ராகிம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல இடங்களில் தங்க நகை பறித்து வந்த இப்ராகிம், கவரிங் நகைக்காக கைதான நிலையில், 'தன் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போனதப்பா' என்று வேதனையுடன் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.












Click it and Unblock the Notifications