வந்தே பாரத் சூப்பர்தான்.. ஆனால் அதில் வழங்கப்பட்ட உணவை பாருங்க.. வெள்ளையா ஓடிய புழு.. நொறுங்கிய பயணி
திருவனந்தபுரம்: வந்தே பாரத் ரயில்களுக்கு சூப்பர் வரவேற்பே மக்களிடையே கிடைத்து வருகிறது. இதனிடையே இப்போது அதே வந்தே பாரத் ரயில் தான் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சர்வதேச அளவில் முக்கியமான ரயில் நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. அதேபோல உலகில் அதிகப்படியான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் ஒன்றாகும் இந்தியன் ரயில்வே.

நமது நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் ரயில் மூலம் எளிதாகச் சென்றுவிட முடியும். அப்படி கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களையும் இணைத்து மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருக்கிறது.
வந்தே பாரத்: பல்வேறு வசதிகள் மற்றும் விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரயில்களையே மக்கள் விரும்பி பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், இப்போது சொகுசு ரயில்கள், விமானங்கள் என அதிநவீன வசதி பல வந்துவிட்டதால் ரயில்கள் மீது மக்கள் ஆர்வம் கணிசமாகக் குறைந்தே வருகிறது. நமது நாட்டில் தொழில்நுட்ப ரீதியாக ரயில்கள் பின்தங்கி இருப்பதாகவும் இதன் காரணமாகவே ரயில்களில் பயணிக்க நடுத்தர வர்க்கத்தினர் விரும்புவதில்லை என்று கூறப்பட்டது.
மேலும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது, இந்தியன் ரயில்வே பல ஆண்டுகள் பின்தங்கி இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில் தான் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாகும். முற்றிலும் குளிர்சாதன வசதி, தானியங்கி கதவுகள், அதிவேக வைஃபை என இதில் விமானத்திற்கு இணையாகப் பல வசதிகள் உள்ளன.
இப்போது நாடு முழுக்க 10+ வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுக்க 150 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான வழித்தடங்களைக் கண்டறிந்து பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கி வைத்து வருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை- பெங்களூர்- மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னை - கோவை இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
சூப்பர் வரவேற்பு: இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை கோவை வந்தே பாரத்தில் கட்டணம் 1365 ரூபாய் மற்றும் எக்ஸிகியூடிவ் கிளாஸில் 2485 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் டிக்கெட்கள் மளமளவென விற்றுத் தீர்ந்து வருகிறது. இதனால் இந்த ரூட்டில் டிக்கெட் பெரும்பாலும் வெயிட்டிங் லிஸ்டிலேயே இருக்கிறது.
அதேபோல நமது அண்டை மாநிலமான கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. நாட்டின் 15ஆவது வந்தே பாரத் ரயிலான இது திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை இயக்கப்படுகிறது. இது 501 கிமீ தூரத்தை வெறும்7.5 மணி நேரத்தில் கடக்க உள்ளது. முறையான சோதனை நடத்தப்பட்டே இந்த வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டது.
உணவு: இந்தச் சூழலில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது வந்தே பாரத் ரயில்களில் உணவும் வழங்கப்படுகிறது. வந்தே பாரத்தில் உணவு இல்லாமல் முன்பதிவு செய்ய ஆப்ஷன் இருக்கிறது என்றாலும் கூட பெரும்பாலானோர் உணவுடன் தான் முன்பதிவு செய்கிறார்கள். மற்ற ரயில்களில் வழங்கப்படும் உணவைக் காட்டிலும் வந்தே பாரத் உணவு சிறப்பாகவே உள்ளதாகக் கூறுகின்றனர்.
இதனிடையே கேரள வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர், ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாகப் புகார் அளித்துள்ளார். இந்த நபர் கடந்த திங்கள்கிழமை கண்ணூரில் இருந்து காசர்கோடு நோக்கி E1 பெட்டியில் பயணித்துள்ளார்.
சர்ச்சை: அப்போது அவருக்குப் பரிமாறப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சாப்பிடாமல் அதை வீடியாவாக மட்டும் எடுத்து வைத்துக் கொண்டார். மேலும், காசர்கோடு ரயில் நிலையம் அடைந்தவுடன் இது குறித்து கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு அனுப்பப்பட்டது என்றும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அவர் கையில் இருக்கும் பரோட்டாவில் புழு நெளியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications