வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது.. கேரள ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்தாண்டு ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்குக் கடன் தள்ளுபடி வழங்குவது குறித்த வழக்கைக் கேரள ஐகோர்ட் விசாரித்து வருகிறது. இதற்கிடையே குறிப்பிட்ட சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு கேரள ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளா எந்தளவுக்கு அழகிய நிலப்பரப்பைக் கொண்ட ஊராக இருக்கிறதோ.. அதே அளவுக்கு இயற்கை பேரிடர்களையும் அதிகம் சந்திக்கும் ஊராக இருக்கிறது. குறிப்பாகக் கேரளாவில் மலைகள் அதிகம் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலச்சரிவும் கூட ஏற்பட்டே வருகிறது. அப்படி தான் கடந்தாண்டு அங்கு மோசமான நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது.

நிலச்சரிவு
கடந்தாண்டு ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, வெள்ளரிமலை பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400+ உயிரிழந்தனர். அதில் பலரது உடல்கள் கூட கிடைக்காத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. அப்பகுதியில் சுமார் 1,000 வீடுகளும் தரை மட்டமாகின.
வழக்கு
கேரளாவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான நிலச்சரிவாக இது பார்க்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பலரும் தங்கள் வீடுகளை மொத்தமாக இழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் தங்கள் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டபோதிலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கவில்லை. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு பல முறை கடிதமும் எழுதியுள்ளார்.
கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது
இந்த விவகாரத்தைக் கேரள ஐகோர்ட்டும் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தள்ளுபடி வழங்க முடியாது என்று மத்திய அரசு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை திருத்தச் சட்டத்தில் அது தொடர்புடைய பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் கடன் தள்ளுபடி செய்ய வங்கிக்கு மத்திய அரசால் அறிவுறுத்த முடியாது எனக் கூறியுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவைக் கருத்தில் கொண்டு, மேலாண்மை சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் கடன் தள்ளுபடிக்குத் தகுதியானவையா என்பதை ஆராயுமாறு மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்குக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
என்ன காரணம்!
அது தொடர்பாகவே மத்திய அரசும் கேரள ஐகோர்ட்டில் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை திருத்தச் சட்டத்தில் அது தொடர்புடைய பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் கடன் தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்த முடியாது என மத்திய அரசு கூறியிருக்கிறது.
முன்பு இருந்த 13வது பிரிவு படி பெரிய பேரழிவுகள் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தள்ளுபடி அல்லது சலுகை கடன் போன்ற நிவாரண நடவடிக்கைகளைத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அறிவிக்க முடியும். இருப்பினும், "இந்த விதி இப்போது சட்டத்தில் இல்லை" என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் உத்தரவு
இருப்பினும், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை இப்படி சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டி அதன் பின்னால் மறைந்து கொள்ளக் கூடாது என்று கூறி கேரள ஐகோர்ட் நீதிபதிகள், கடன் தள்ளுபடி செய்ய முடியுமா என்றை மூன்று வாரங்களில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications