சென்னைக்கு மிக அருகில்.. ரியல் எஸ்டேட் இல்லங்க! மலையேற்றம் செய்ய சூப்பரான 2 சுற்றுலா தலங்கள்
சென்னை: சென்னைக்கு மிக அருகாமையில் மலையேற்றம் செய்ய இரண்டு அருமையான தலங்கள் உள்ளன. அவை என்ன? அங்கு எப்படி செல்வது? விரிவாக பார்ப்போம்.
முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை ஆகிய ஐந்திணைகளுக்கு ஏற்ப பல வகையான நிலப்பரப்புகளைக் கொண்டது தமிழ்நாடு. பறந்து விரிந்த சமவெளி பகுதிகள், உயரமான மலைகள், நீளமான நதிகள், நீளமான கடற்கரை, பசுமையான விவசாய நிலங்கள், வறண்ட கரிசல் பூமி என தமிழ்நாட்டில் இல்லாத நிலப்பரப்புகளே இல்லை. இப்படி சுற்றிப் பார்க்க சகல வசதிகளையும் கொண்ட தமிழ்நாட்டில் மலையேற்றம் செய்வதற்காகவே ஏராளமான பகுதிகள் உள்ளன. அதில் சென்னைக்கு அருகாமையில் சிறப்பான அனுபவத்தை தரும் மலைப்பாதைகளும் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.

பெருங்களத்தூர் மலைப்பாதை: சென்னையில் பணிபுரிபவர்கள் ஒருநாள் விடுமுறையில் மலை ஏற்றம் செய்ய விரும்பினால் அவர்களுக்காகவே அளவெடுத்து செய்தது போன்ற இடம் தான் பெருங்களத்தூர் மலை பாதை. மனித வாசம் அதிகம் வீசாத இயற்கையின் இன்பத்தை இனிதாக அனுபவிக்க பெருங்களத்தூர் மலைப்பாதை உங்களுக்கு உதவும். 4.5 கிலோ மீட்டர் தூரம் வளைந்து செல்லும் கரடு முரடான இந்த பாதையில் கவனமாக தான் நடக்க வேண்டும். சில பாதைகள் செங்குத்தாக இருப்பதால் கவனமும் அவசியம்.
ஓரளவு மலை ஏற்ற அனுபவம் உள்ளவர்கள் இப்பாதையில் பயணிக்கலாம் இதயத் துடிப்பை எகிற வைக்கும் திரில்லிங்கான அனுபவத்தை பெருங்களத்தூர் மலை ஏற்றம் உங்களுக்கு வழங்கும். காஞ்சிபுரம் தாம்பரம் வழி தடத்தில் அமைந்துள்ள பெருங்களத்தூர் பேரூராட்சியில் இந்த மலைப் பாதை இருக்கிறது. சென்னையில் இருந்து 37. 5 கிலோ மீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும் பல்லாவரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் பெருங்களத்தூர் இருக்கிறது.
பல்லாவரம் மலை பாதை: இதுவும் சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள இடம்தான். கிண்டி தேசிய பூங்காவின் பசுமையால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கும் இந்தப் பாதை இனியதோர் அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். சென்னைவாசிகள் புத்துணர்ச்சியோடு வார விடுமுறையில் மலையேற்றம் செய்ய சரியான இடமாகும். இங்கு நீங்கள் பார்க்கும் காட்சிகள் தொடர்ந்து பல்லாவரத்தை நோக்கி பரவசத்துடன் உங்களை இழுத்து வரும். 2.3 கிலோமீட்டர் தூரத்தை கொண்ட இந்த மலைப்பாதையை கடக்கும் போது இயற்கை எழில் கொஞ்சும் அழகிய காட்சிகளை காணலாம். எவ்வளவு தூரம் நடந்தாலும் உடல் சோர்வே தெரியாத வகையில் அதன் இயற்கை சூழல் உங்களை மாற்றும்.
தாம்பரத்துக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் பல்லாவரம் காஞ்சிபுரத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து இருக்கிறது. ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வழியாக எளிதில் பல்லாவரத்தை சென்றடையலாம்.












Click it and Unblock the Notifications