அன்றே என்னை திமுகவுக்கு அழைத்தார் கருணாநிதி.. மநீம தலைவர் கமல்ஹாசன் சூசக பேச்சு! கூட்டணி கன்பார்ம்?
கோவை: கோவையில் இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், "அப்போதே கருணாநிதி என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார். நான் தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட கோவை மண்டல நிர்வாகிகள் பங்கேற்க, கமல்ஹாசன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மநீம தலைவர் கமல்ஹாசன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் தொடர்பாக ஆலோசித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "சனாதனம் பற்றி பேசியதற்காக ஒரு சின்னப்பிள்ளையை அடியோ அடி என அடிக்கிறார்கள். அது அவரது தாத்தாவிற்கு தாத்தா சொன்ன விஷயம். பெரியார் சனாதனத்தை பற்றி விரிவாகப் பேசியுள்ளார். பெரியாரை திமுக மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. பெரியார் தமிழ்நாட்டிற்குச் சொந்தக்காரர். அதனால் நான் உரிமை கொண்டாடுவேன்." எனப் பேசியுள்ளார்.
மேலும், "வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் கோவைக்கு வருவேன். எத்தனை முறை மூக்கு உடைந்தாலும் மருந்து போட்டுக் கொண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன். இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதே கலைஞர் என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார். நான் அவருக்கு பதில் சொல்லவில்லை. அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்பா காங்கிரஸ் என்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும். " எனப் பேசியுள்ளார் கமல்ஹாசன்.

திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். முன்னதாக, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திலும் கலந்து கொண்டார் கமல்ஹாசன். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருடன் பல்வேறு மேடைகளை கமல்ஹாசன் பகிர்ந்து வருவதால் திமுக கூட்டணியில் கமல் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், கமல்ஹாசனின் பேச்சு அதை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications