கொடைக்கானல் மலை சாலையில் கார் மீது ஏறி நின்ற லாரி.. நல்வாய்ப்பாக நடந்த அதிசயம்
கொடைக்கானல்: கொடைக்கானல்- வத்தலகுண்டு மலை சாலையில் மூளையார் என்ற இடத்தில் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த கார் மீது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும்.இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். பொதுவாக கொடைக்கானலில் மலர் கண்காட்சி மே மாதத்தில் நடத்தப்படும். அந்த வகையில் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் இன்று காலை 8 மணியளவில் 61 ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி,வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் ஆகியோர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு கிளி, நெருப்புக்கோழி,சேவல்,மயில்,கரடி போன்றவை உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 2.50 லட்சம் மலர்ச் செடிகள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி இருக்கின்றன.
இந்த கண்காட்சியில் வேளாண்,தோட்டக்கலை மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், மீன் பிடித்தல் போட்டி,நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று முதல் நடத்தப்பட உள்ளன. இந்த மலர் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
கொடைக்கானல் மலர் கண்காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு 75 ரூபாயும் 10 வயதுக்குக் கீழ் உள்ள சிறியவர்களுக்கு 35 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம். இந்நிலையில் கொடைக்கானல் மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கொடைக்கானல்- வத்தலகுண்டு மலை சாலையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. எனினும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications