“அந்த அருவி போல் அன்பை தருவாளே”.. தமிழ்நாட்டில் “ஹனிமூன்” செல்ல 3 முத்தான இடங்கள்! தம்பதிகள் தயாரா?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இந்த சீசனில் திருமணங்கள் திருவிழாக்கள்போல மகிழ்ச்சிகரமாக நடைபெற்று வரும் நிலையில் தம்பதிகள் தேனிலவு செல்வதற்கு தமிழ்நாட்டில் 3 முத்தான இடங்கள் என்னவென்று பார்ப்போம்.
ஊட்டி: எந்த சந்தேகமும் இன்றி இந்த பட்டியலில் ஊட்டிக்கு முதலிடத்தை தரலாம். ஊட்டிக்கு மற்றொரு பெயர் என்ன என்று கேட்டால் காதல் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னை காதலிக்க வைக்கும் இடமாக இருக்கிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் ஊட்டி மலை ரயில் பயணம், அருகே இருக்கும் குன்னூர், கோத்தகரியின் தேயிலை தோட்டங்கள், முகங்களை உரசிச் செல்லும் மேகக் கூட்டங்கள், இதம் தரும் குளிர் என ஊட்டியின் பியூட்டியை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். மலைகளின் அரசியான ஊட்டிக்கு உங்களின் அரசியை அழைத்து சென்று மகிழ்ச்சியாக ஊட்டி தாவரவியல் தோட்டங்களுக்கு செல்லலாம். அமைதியான ஊட்டி ஏரிக்கு சென்று படகு சவாரி, குதிரை சவாரி சென்று மகிழலாம்.

கொடைக்கானல்: மலைகளின் அரசியை சொல்லிவிட்டு இளவரசியை விட்டுவிட்டால் அது பெரிய குற்றமாகிவிடும் அல்லவா? நமது கொடைக்கானலை பற்றிதான் பேசுகிறேன். உங்கள் தேனிலவு தேன்போல் இனிமையானதாக இனிக்க கொடைக்கானல் செல்லலாம். மலைகளின் இளவரசிக்கு உங்கள் அரசியுடன் சென்று திருமண உறவை மேலும் இறுக்கமாக்கிக்கொள்ளுங்கள். அழகிய பிரையண்ட் பூங்கா உங்கள் மனதை மகிழ்விக்கும். நட்சத்திர வடிவிலான கோடை ஏரியில் செல்லும் படகு சவாரி ரம்மியமான அனுபவமாக இருக்கும். தூண் பாறை ட்ரெக்கிங், வெள்ளி அருவி நீர்வீழ்ச்சி, உருண்டு புரள தோன்றும் கவர்ச்சிகரமான புல்வெளிகள், காடுகள், பழத்தோட்டங்கள் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள், ஜில்லென்ற வானிலை அங்குள்ள மலர்களை மட்டுமின்றி உங்கள் இருவருக்கும் இடையே காதலையும் பூக்க வைக்கும்.

மேகமலை: என்ன ஒரே ஊட்டி, கொடைக்கானல் பற்றியே சொல்கிறீர்கள். புதிதாக ஒரு இடத்துக்கு உங்கள் துணையை அழைத்துச் சென்று மகிழ்விக்க விருப்பமா? இருக்கவே இருக்கு மேகமலை. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள இது ஊட்டி, கொலைக்கானலை ஒப்பிடுகையில் மிகக்குறைவான மக்களாலேயே அறியப்படுகிறது. இயற்கை மாறாத அழகிய வனப்பகுதி, மேகங்கள் சூழ்ந்த மலைகள், தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். அடர்ந்த, அழகிய காடுகள் ஆகியவற்றின் இயற்கை அழகில் இங்கே தம்பதிகள் மகிழ்ச்சியடையலாம். உண்மையான மாயாஜாலத்தை கண்ட உணர்வை அள்ளித் தரும் 'மேகமலை அருவி', பசுமையான 'வெள்ளிமலை' மற்றும் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட 'மேகமலை வனவிலங்கு சரணாலயம்' போன்றவை வியப்பை தருவதுடன் அதனால் ஏற்படும் மன அமைதியும் உற்சாகமும் உங்கள் காதலை பெருக்கெடுத்து ஓடும் அருவிபோல் அதிகரிக்க வைக்கும்.

மூன்றுக்கும் செல்ல விரும்பினால் ஒரு வாரம் விடுமுறை எடுத்துவிட்டு ஊட்டி அடுத்து கொடைக்கானல் அடுத்து மேகமலை என முழு மகிழ்ச்சியையும் அனுபவிக்கலாம்.












Click it and Unblock the Notifications