உடுமலை-மூணாறு சாலையில் சுற்றுலா போறீங்களா.. என்ன உருவம்.. வீடியோவை பார்த்து ஆடிப்போன பயணிகள்
மூணாறு: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று.. இந்த சுற்றுலா தலத்திற்கு பிரதான வழி என்றால், தேனி, போடிநாயக்கனூர் வழியாக செல்வது தான். அடுத்ததாக கொச்சினில் இருந்து அடிமாலி வழியாக வரலாம். இதேபோல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக மூணாறுக்கு சுற்றுலா வரலாம். இதில் உடுமலை வழி வனவிலங்குகள் அதிகம் வரும் சாலையாகும். இந்நிலையில் உடுமலை-மூணாறு சாலையில் புலி நடமாட்டம் உள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலைபேட்டையில் இருந்து மூணாறுக்கு சாலை ஒன்று இருக்கிறது இந்த சாலை மிகவும் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் சாலையாகும்.. இந்த வழியாக சென்றால், மறையூர், காந்தளூர் எனதமிழர்கள் அதிகம் வாழும் கேரளாவின் அழகான பகுதிகளை காணமுடியும்.. இதன் வழியாக இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பஸ், சரக்கு உள்ளிட்ட வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

உடுமலை மூணாறு சாலை
கோவை, திருப்பூர், பழனி, பொள்ளாச்சி, ஈரோடு, போன்ற பகுதி மக்கள் மூணாறு செல்ல உடுமலை வழியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இரவில் செல்வது ஆபத்தானது.குறிப்பாக இருசக்கர வாகனத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிக்கவே கூடாது. ஏனெனில் மிகவும் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் அதில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டமும் இருக்கும். இரவில் கண்டிப்பாக வனவிலங்குகள் வலம் வரும் என்பதால் யாரும் இரவில் இருசக்கர வாகனத்தில் இந்த வழித்தடத்தில் செல்வதை விரும்பமாட்டார்கள்.
பரவிய வீடியோ
இந்நிலையில் உடுமலை-மூணாறு சாலையின் ஓரத்தில் சின்னார் அருகே புலி ஒன்று நடமாடுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது தற்போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
புலி நடமாட்டம்
இந்தநிலையில் புலி நடமாட்டம் குறித்து தமிழக வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது புலி நடமாட்டம் என்பது வதந்தி என என்று கூறினார்கள். ஏனெனில் வனப்பகுதியில் தற்போது சாரல் மழை பெய்வதால் வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை என்றார்கள். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை-மூணாறு சாலையானது வனப்பகுதி வழியாக செல்வதால் கோடை காலத்தில் வனவிலங்குகள் தென்படுவது உண்டு. ஆனால் பருவமழை காலங்களில் வனவிலங்குகள் சாலைகளில் தென்படுவது அரிதான நிகழ்வாகும்.
வனத்துறை விளக்கம்
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவானது கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பகுதியாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சப்படத் தேவையில்லை. இருந்த போதும் கவனமாக வாகனங்களை இயக்குது நல்லது. அத்துடன் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு இறங்கி வனப்பகுதிக்குள் செல்வதையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உடுமலை- மூணாறு சாலை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications