ஜிங்குச்சா.. நெல்லையப்பர் கோயிலில் ”தக்லைப்” ரீல்ஸ் போட்டு சிக்கிய சிறுவர் - சிறுமி
நெல்லை: இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும் என பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சிறுவர் - சிறுமியர் இருவர் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தக் லைப் (Thug life) படத்தில் கமல்ஹாசன் - சிம்பு ஆடும் ஜிங்குச்சா (Jinguchaa song) என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் ஆக இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர். வீடியோ ட்ரெண்டிங் ஆன நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கைகள் வலுத்துள்ளன.
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில், இன்றைய தலைமுறையினர் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. பேஸ்புக் இன்ஸ்டாவில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எதையாவது வித்தியாசமாக செய்கிறோம் என்ற பெயரில் முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடுவது, பைக்குகளை ஆபத்தான முறையில் ஓட்டுவது, பொது இடங்களில் பலருக்கும் இடையூறு செய்யும் விதமாக நடந்து கொள்வது என எல்லை மீறும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

நெல்லையப்பர் கோவிலில்
அதுமட்டும் இன்றி கெத்து என நினைத்துக்கொண்டு பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டுவது, போலீஸ் நிலையத்தில் வைத்து ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு பின்னர் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கின்றன. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி எத்தனையோ இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி பெரும் புகழ் அடைகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
ஆனால், இப்படி அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துபவர்கள் சிலர் என்றாலும், பலரும் சமூக வலைத்தளங்களை வைத்து நேரத்தை வீணடித்து தேவையில்லாத வம்பிலும் பலர் சிக்கிக் கொள்கிறார்கள். இந்நிலையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சிறுவர் - சிறுமியர் இருவர் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
முகம் சுளிக்கும் வகையில்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலில் உள்ள காந்திமதி அம்பாள் சன்னதி முன்புள்ள வளாகத்தில் சிறுவர் - சிறுமி ஜோடி ஒன்று சிக்கிடான் சிக்கிட்டான் சிக்கார காளை என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் ஆக இண்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர்.
தக்லைப் படத்தில், நடிகர்கள் கமல்ஹாசன் - சிம்பு ஆகியோர் ஆடும் அந்த பாடலுக்கு சிறுவர் - சிறுமி 2 பேரும் சேர்ந்து, முகம் சுளிக்கும் வகையில் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பக்தர்களை வேதனை அடைய வைத்துள்ளது. நெல்லையப்பர் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பிரசித்தி பெற்ற கோவிலில் இப்படி நடந்து கொள்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறிய பக்தர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கோயில்களில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், கோயில் ஊழியர்கள் எப்படி இதை கவனிக்காமல் விட்டனர் என்று கேள்வி எழுப்பியிருக்கும் பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இத்தகைய செயல்கள் இனி நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் சம்பவம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருச்செந்தூர் முருகன் கோயில் வளாக பகுதிகளில் தூத்துக்குடியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் திருச்செந்தூர் முருகா திருச்செந்தூர் முருகா என்ற பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு இருந்தார். அவரது வீடியோ கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோவையும் நீக்கியிருந்தார். சென்னை கபாலீஸ்வரர் கோயிலிலும் இதே போல ரீல்ஸ் எடுத்த சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன.
பக்தர்களுக்கு வேண்டுகோள்
இதற்கிடையே, நெல்லையப்பர் கோயிலில் (Nellaiappar Temple) ரீல்ஸ் எடுத்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோயில் செயல் அலுவலர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி புகார் அளித்துள்ளார். இது போன்ற அநாகரீகமான செயல்களை கோவிலில் செய்ய வேண்டாம் எனவும் புகைப்படம் வீடியோ உள்ளிட்டவைகள் எடுக்க ஏற்கனவே அமலில் உள்ள நடவடிக்கைகளை பக்தர்கள் பின்பற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications