நேற்று வங்கக்கடல்.. இன்று அரபிக்கடல்! 16 மாவட்டங்களில் கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
சென்னை, திருவள்ளூர் என கடந்த கடந்த ஒரு வார காலமாக வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்து வந்தது. மிக்ஜாம் புயல் இந்த மழையை தீவிரப்படுத்தி சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டது. இந்நிலையில், தற்போது தென் தமிழகத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கிய கனமழை இன்று காலை வரை நீடித்திருக்கிறது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்றும் நெல்லை, தூத்துக்குடி உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. எனவே அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்திற்கு மழையை கொடுக்காது. இருப்பினும் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றைய நிலவரத்தை பொறுத்த அளவில், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கீழ் கோத்தகிரி 12 செ.மீ., கோவை 11 செ.மீ., குண்டேரிபள்ளம் (ஈரோடு), பந்தலூர் (நீலகிரி) தலா 10 செ.மீ., மஞ்சலார், பாளையங்கோட்டை, தேவலா தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications