வாழ்க்கையே போயிருச்சு.. கருப்பான கடல்.. செத்து மிதக்கும் மீன்கள்.. பரிதவிக்கும் எண்ணூர் மீனவர்கள்
சென்னை: வட சென்னையில் பெட்ரோலியம் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கச்சா கழிவு எண்ணெய் கடல் நீரில் கலப்பதால் எண்ணூரில் கடல் கறுப்பாக மாறியுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கடலில் கலக்கப்படுவதால் எண்ணூர் அருகே கடல் முழுவதும் கருப்பு நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. மீன்கள், கடல் உயிரினங்கள் செத்து மிதப்பதால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகரில் புரட்டியெடுத்த புயலால் புழல் ஏறி கொள்ளளவு முழுவதும் நிரம்பியது. ஏறி நிரம்பி வழிந்ததால் உபரி நீரானது திறக்கப்பட்டு கொசஸ்தலை ஆறு வழியாக திறந்து விடப்பட்ட நிலையில் எண்ணூர் முகத்துவாரம் வழியாக வெள்ளநீர் வடிந்து கடலுக்கு செல்ல வேண்டும்.
புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டதால் எண்ணூர் முகத்துவாரத்தில் தண்ணீரானது கடல் உள்வாங்காத காரணத்தால் கொசஸ்தலை ஆற்றில் நிரம்பி வழிந்த தண்ணீர் திருவொற்றியூர், மணலி, சடையன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளில் புகுந்தது. திருவொற்றியூரில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். பல பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது.
எண்ணூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கழிவு மொத்தமும் கொசஸ்தலை ஆற்றிலும் கலந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் மொத்த நீளம் 136 கி.மீ சென்னை நகருக்குள் 16 கி.மீ ஓடுகிற இந்த ஆறு ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து திருவள்ளூர், சென்னை வழியாக ஓடி எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது.
வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்கள்,4 சக்கர வாகனங்களை கச்சா எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளது. தண்ணீரில் கலந்த எண்ணெயானது திடீரென தீ பற்றி கொள்ளும் என்பதால் சமையலுக்கு கூட நெருப்பை பற்றவைக்க முடியாமல் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எண்ணூரில் கடல் பகுதிகள் எண்ணையாக காட்சி அளிப்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீலக்கடல் கருப்பு கலராக மாறிப் போயுள்ளது. எண்ணை பரவியுள்ள பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இது போன்று பாதிப்புக்குள்ளான இடங்களில், கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. எண்ணூர் பகுதியில் பெரிய ஆமைகளும், மீன்களும் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
தங்களின் வாழ்வாதாரம் மொத்தமும் அழியும் நிலையில் உள்ளதாகவும் மீன்கள் உயிர்வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் கடல் பகுதி மாறி வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள எண்ணெய் நிறுவனங்கள், தொழிற்சாலைகளை மூடினால் மட்டுமே மீன்கள் உயிர்வாழ தகுதியான பகுதியாக எண்ணூர் மாறும் என்றும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
