திருநெல்வேலி, தேனி, தென்காசி, குமரி.. அடுத்த 3 மணி நேரத்தில் செம மழை.. திடீர்னு வந்த வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்யும் என்றும் அறிவித்திருக்கிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சமீப நாட்களாகவே, மழை பெய்து வருகிறது.. குறிப்பாக, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது... அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வந்திருந்தது.

அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 14 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
காற்றின் வேகம்: இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சூறாவளிக்காற்று: ஆகஸ்ட் 5ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால்தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 32 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் ஊட்டிக்கு
வருகை தந்துள்ளனர்.
ஊட்டிக்கு வருகை: பேரிடர் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த குழுவினருக்காக 2 வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெறும் வரை மீட்பு குழுவினர் நீலகிரியில் தங்கியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைப் பொழிவு நீண்டகால சராசரி அளவான 422.8 மி.மீ-ல் 106 சதவீதம்இருக்கும் என்றும். கடந்த ஜூன் 1-ல் இருந்து இதுவரை 453.8 மி.மீமழை பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவைவிட 2% அதிகம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 4 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது












Click it and Unblock the Notifications