ஓடுபாதையில் கடல் போல் தேங்கிய வெள்ளம்! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!
சென்னை: வங்கக் கடலில் உருவான புயல் இன்று சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்து வருகிறது. மழை ஒருபுறம் இருக்க மறுபுறம், காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இண்டிகோ விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சில வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்தன. இதனையடுத்து சென்னைக்கு வந்து சேர வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. விமான ஓடுபாதையில் மழை நீர் கடல் போல சூழ்ந்திருப்பதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஆனால் புயல் இரவுதான் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விமான நிலையம் மூடப்படும் நேரம் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி சென்னையின் தென் கிழக்கே சுமார் 130 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. புயல் நகரும் வேகம் குறைந்திருந்த நிலையில், இப்போது இது அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் மழை+காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளை பொறுத்தவரை சுமார் 10,000 பேர் களத்தில் இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது வெள்ள நீரை அகற்ற ராட்சத பம்புகளும் தயார் நிலையில் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications