சென்னையில் பலத்த காற்றுடன் பல இடங்களில் பலத்த மழை.. நான்காம் சுற்று மழை எப்படி இருக்கும்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னை முழுவதும் கருமேகக்கூட்டத்துடன் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்றுடன் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் , மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு உள்பட பல பகுதிகளில் மழை பெய்ததால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நனைந்தபடி சென்றனர்.
தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்தது. அது தற்போது தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இது டெல்டா கடற்கரை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அது தரங்கம்பாடி-அதிராம்பட்டினம் இடையே வேதாரண்யம் அருகில் கரையேறி, திருவாரூர் மாவட்டம் அலையாத்தி காடுகள் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அங்கேயே மையம் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) மழைப்பொழிவு தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும், இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று மட்டும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
நாளை தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தபடியே மழை ஆரம்பித்துள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் காலை 9மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இந்த மழையில் நனைந்தபடி சென்றனர். காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், படிப்படியாக காற்று அதிகரிக்க தொடங்கியது. குளிர்ந்த காற்று வேகமாக வீசத்தொடங்கிய நிலையில், அப்படியே கனமழை பெய்தது. பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் , மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications