"இவ்வளவு மழை இருக்கும்னு நாங்களே எதிர்பார்க்கல.." அடுத்து சென்னை ஆணையர் சொன்ன மிக முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று குறுகிய காலத்தில் அதிதீவிர கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தாலும் கூட இந்தளவுக்கு கனமழை இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறியுள்ளார். நிலைமையை சீர் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் இரவு முழுக்க பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில், குறிப்பாக வடசென்னையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, குறுகிய நேரத்தில் கொட்டி தீர்த்தது. மழையை தொடர்ந்து இரவு உடனடியாக களத்திற்கு வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், மீட்பு பணிகளை துரிதமாக ஒருங்கிணைத்தார். தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Chennai Heavy Rain

சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன்

சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் மேலும் கூறுகையில், "17ஆம் தேதி இரவு தொடங்கிய மழை சென்னை பெருநகர பகுதிகளில், குறிப்பாக வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் மிக கடுமையாகப் பெய்துள்ளது. திருவொற்றியூர், மணலி, சாத்தாங்காடு, பிராட்வே, பிரகாசம் சாலை, என்.எஸ்.சி போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது.

வெறும் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் 35.8 செ.மீ வரை மழை கொட்டி தீர்த்துள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 70 செ.மீ மழைதான் பெய்யும். ஆனால், ஒரே இரவில் 35.8 செ.மீ மழை பெய்திருப்பது ஒரு மிகத் தீவிரமான வானிலை நிகழ்வாகும்.

எதிர்பார்க்கவில்லை

இந்த 2026ஆம் ஆண்டு 'சூப்பர் எல் நினோ' ஆண்டாக இருப்பதால் வடகிழக்குப் பருவமழையில் மிக பெரிய பாதிப்புகள் இருக்கும் என வல்லுநர்கள் முன்பே எச்சரித்திருந்தனர். வானிலை ஆய்வு மையமும் பேரிடர் மீட்பு படையினரும் 17 மற்றும் 21-ஆம் தேதிகளில் அதிகனமழை இருக்கும் என முன்னறிவிப்பு இருந்ததே தவிர, இந்த அளவுக்கு அதிக மழைப்பொழிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, உடனடியாக 15,000 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களை இரவு பணியில் முழுமையாக ஈடுபடுத்தியுள்ளோம். ஆணையர், துணை ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். அதிகாலை 2:45 மணி வரை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டு அறையை நேரில் ஆய்வு செய்தார்.

மாநகராட்சி பணியாளர்கள்

பாரிமுனை, பிராட்வே பேருந்து நிலையம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.. அப்பகுதிகளில் ஒன்றரை அடி வரை தண்ணீர் தேங்கியிருந்தாலும், போக்குவரத்துக்கு எவ்வித தடையோ பாதிப்போ இல்லை. காலை விடியும்போது மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கும் வகையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஒட்டுமொத்த குழுவும் முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. மழையின் தீவிரம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மணி நேரமும் முதல்வர் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருகிறார்.

மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 04வது பட்டாலியனை அழைத்துள்ளோம். அவர்கள் 4 மிதவை படகுகள், 40 லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் ஜெனரேட்டர்களுடன் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் மீட்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் 50 பேர் கொண்ட குழு ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு, வடசென்னைப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண மையங்கள்

முன்னெச்சரிக்கையாக 5 நிவாரண மையங்கள் தயார் செய்யப்பட்டு, உணவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். டிரான்ஸ்பார்மர் மற்றும் திறந்தவெளிக் கேபிள்கள் அருகே செல்லும்போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலோ அல்லது ஆற்று பகுதிகளிலோ சென்று வீடியோ எடுப்பதையோ, வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். இளைஞர்களையும், குழந்தைகளையும் அந்தப் பகுதிகளில் தனியாக விடக்கூடாது. வருகிற 17 முதல் 21ஆம் தேதி வரையும் இரவு நேரங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் விழிப்புடன் இருந்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+