பெங்கல் புயல்.. வேகமாக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இப்போது எங்கு இருக்கிறது?
சென்னை: ஃபெங்கல் புயல் இன்று உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில், தமிழகத்தின் அருகே இப்போது எங்கு உள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். "தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 5.30 அளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது இலங்கையின், திருகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 130 கி.மீ., தென்கிழக்கே 400 கி.மீ. நாகப்பட்டினம், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 510 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து இலங்கை கடற்கரையில் இருந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை (வியாழக்கிழமை) கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழை வருகிற 1-ந் தேதி வரை நீடிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications