லேட்டானாலும் லேட்டஸ்டாக வரும் ஃபெங்கல் புயல்.. இன்றைக்கு சம்பவம் கன்பார்ம்! ஐஎம்டி சொல்றதை பாருங்க!
சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வரும் நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடர்கிறது.

தற்போது அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் 3 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, மாலை 5 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 420 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் காலை வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபோல சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
நாளை முதல் 29ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, வங்க கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரையிலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதே போல ஆந்திரா கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 27ஆம் தேதி 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகை, கடலூர், சென்னை , எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications