சென்னையில் கொட்டிய மழையால் 9 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர்! தற்போதைய நிலை என்ன? மாநகராட்சி தகவல்
சென்னை: சென்னையில் இருக்கும் சுரங்கப்பாதைகளில் தற்போது மழைநீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 18 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்றும் தடையின்றி போக்குவரத்து இயங்கி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 சுரங்கப்பாதைகள் மழைநீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகலில் புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் (பெங்கல்) புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. காலை 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரதான சாலையான ராதாகிருஷ்ணன் சாலை, தண்டையார்பேட்டை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
சென்னையில் உள்ள 24 சுரங்கப்பாதைகளில், 9 சுரங்கப்பாதைகளில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கிய 9 சுரங்கப்பாதைகளில், மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கெல்லாம் போக்குவரத்து சீரானது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, RBI சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் பலத்த காற்று காரணமாக சென்னையில் சாலைகளில் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அசோக் பில்லர் பிரதான சாலையில் விழுந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications