பெஞ்சல் புயல்.. சென்னை மக்களுக்கு மெட்ரோ நிர்வாகம் கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை: ஃபெஞ்சல் (Fengal) புயலின்போதும் மெட்ரோ ரயில் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி வழக்கம்போல் இயக்கப்படுகிறது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை, மாலை 5-8 வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயலாக உருவாகி இருக்கிறது. நேற்று பிற்பகல் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று இரவு கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயலின் காரணமாக நேற்றுமுதல் சென்னை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று சென்னை உட்பட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. புயல் காரணமாக சென்னையில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதோடு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளை கவனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வழக்கமான ரயில் சேவைகள் தாமதம் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் நகரும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் தங்கள் வாகனங்களை 30-11-2024 முதல் கோயம்பேடு மெட்ரோ, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் (வானிலை நிலையைப் பொறுத்து அப்டேட் செய்யப்படும்).
தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள இந்த மெட்ரோ நிலைய வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம். மழைக்காலம் முடிந்த பிறகு வானிலை அறிவித்த பிறகு வாகனம் நிறுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால்– 1860 425 1515, மகளிர் உதவி எண் - 155370” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications