தத்தளிக்கும் சென்னை.. ஜிஎஸ்டி ரோட்டில் மீன்பிடித்த போலீஸ்காரர்.. எவ்வளவு பெருசு பாருங்க!
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் விடாமல் கனமழை கொட்டி வருகிறது. சென்னை ஜிஎஸ்டி சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் சாலையில் துள்ளிக்குதித்த மீனை பிடித்து எடுத்து சென்றார். இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று மதியம் பெஞ்சல் புயல் உருவானது. இந்த பெஞ்சல் புயலை கணிப்பது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இதனால் புயல் உருவாவது மற்றும் பாதை உள்ளிட்டவற்றில் தொடர்ந்து வெவ்வேறு அறிவிப்புகள் என்பது வெளியிடப்பட்டு வந்தன.

இந்த புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்த புயல் இன்று மாலையில் கரையை கடக்க உள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று மாலை புயல் கரையை கடக்க உள்ளது.
இந்த புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று அதிகாலை முதல் பல இடங்களில் விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் மழைநீர் வடிய ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து காவலர்கள் மழைநீர் வெளியேற வசதியாக கழிநீர் கால்வாயை தூர்வாரினர். இதனால் வேகமாக தண்ணீர் வடிய தொடங்கியது. இந்த வேளையில் சாலையின் நடுவே மீன் ஒன்று தத்தளித்தது. இதை பார்த்த காவலர் அதனை பிடித்து கவரில் போட்டு எடுத்து சென்றார். அந்த மீன் ஓரளவு பெரிய சைஸில் இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
சென்னையை பொறுத்தவரை இன்று காலை 8.30 மணி முதல் பல்வேறு இடங்களில் மழை என்பது தொடர்ந்து பெய்து வருகிறது அதன்படி சென்னையில் காலை 8. 30 மணி முதல் அதிகபட்சமாக கொளப்பாக்கத்தில் 10.25 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்ததாக மீனம்பாக்கத்தில் 10.2 சென்டிமீட்டர், நுங்கம்பாக்கத்தில் 9.70 சென்டிமீட்டர், நந்தனத்தில் 8.20 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதுதவிர சென்னையில் தொடர்ந்து கனமழை கொட்டி வரும் சூழலில் பல இடங்களில் 7 செமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. புயல் கரையை கடக்கும்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications