Heavy Rain: திருச்செந்தூரில் ஒரே நாளில் 15 செமீ மழை.. விடிய விடிய பெய்த மழையால் முருகன் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் கனமழையால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கியது.
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க உள்ள சூழலில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருச்செந்தூரில் 15 செமீ மழை
தென் மாவட்ட கடலோர பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் தலா 15 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குலசேகரன்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய விடிய பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சண்முக விலாச மண்டபத்திற்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
முருகன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது
மேற்கு கோபுர நுழைவாயில் படிக்கட்டுகள் வழியாகவும் திருச்செந்தூர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதையிலும் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை 7 மணி வரை தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நெல்லை, தென்காசியில் கனமழை
இதேபோன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. நேற்று இரவில் இருந்தே லேசான மழையாக பெய்யத் தொடங்கிய நிலையில் இன்று காலை வரை தொடர்ந்தது. காலையில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
தென்காசி, குற்றாலம், பாபநாசம் என மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் மாவட்டங்கள்
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிதிருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்று காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications