சென்னையில் இன்று கனமழை பெய்யும்! ஜூலை 16 - 25 வரை நல்ல செய்தி வரும்! தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். இடியுடன் கூடிய மழையாக இருக்கும் என்றும் வடதமிழகத்திற்கும் மழையை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை நகரை நோக்கி கடல் காற்றானது வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
சென்னையின் சில இடங்களில் மிக தீவிர கனமழை பெய்யும். சில இடங்களில் மழை பெய்யாது. இந்த சீசனில் நுங்கம்பாக்கத்தில் 190 மி.மீட்டர் மழை பெய்து அதிக மழை பெய்த இடங்களில் முன்னணியில் இருக்கிறது. அதே வேளையில் மீனம்பாக்கத்தில் 36 மீ.மீ. மழைதான் பெய்துள்ளது.
ஆந்திர கடலோரத்தை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் வடதமிழக மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களுக்கு காற்று குவியல் உண்டு பண்ணும். அது போல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும். கேரளா, கர்நாடகா , வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். அப்போது 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications