சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை வாபஸ்.. புயல் கரையை கடக்க எவ்வளவு நேரம் ஆகும்?
சென்னை: வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கிவிட்டதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது புயலின் முன்பகுதி கரையை தொட்டுவிட்டதாகவும், அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் முழுவதுமாக புயல் கரையை கடந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது, மரக்காணம் பகுதியில் 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதற்கிடையே சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழைக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புதுவை வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்தே சென்னை - புதுச்சேரி வரை தொடர்ந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. தற்போது புயல் கரையை தொட்டுள்ள நிலையில் காற்றின் வேகம் மற்றும் மழை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணி அளவில் கரையை தொட்டுள்ளது என்றும், புயலின் முன்பகுதி கரையை கடக்க ஆரம்பித்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்திற்குள் முழுவதுமாக கரையை கடந்துவிடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க ஆரம்பித்துள்ளதால் மரக்காணம் பகுதியில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. திருவண்னாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். விழுப்புரம், புதுச்சேரி, கடலூரில் தொடர் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கும் இந்த மழை தொடரும். வடக்கு உள் மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
காற்றை பொறுத்தவரை, குறிப்பாக மழை பதிவாகியிருக்க கூடிய மாவட்டங்களில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தரைக்காற்று இயல்புக்கு மாறாக வீசக்கூடும். 50 - 60 கி மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அவ்வப்போது 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அடுத்த 3 மணி நேரத்தில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் சென்னையில் அதிகனமழை இருக்க வாய்ப்பு குறைவு. விட்டு விட்டு மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேர அப்டேட்டில், அதாவது இன்று இரவு 10 மணி வரை சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றே வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications