விடாது பெய்யும் கனமழை.. நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி.. அடையாறு ஆற்றங்கரையோர மக்களே அலர்ட்
சென்னை: நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. ஏரியின் நீர் மட்டம் 22 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் விரைவில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளது. அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம்: சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறக்கப்படும் போது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி நீர் வரை திறக்கப்பட்டது.
சென்னையின் நகர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் பெருவெள்ளம் சூழ்ந்தது. அடையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் பல குடியிருப்புகளை மூழ்கடித்தது. கடந்த சில வாரங்களாக ஓய்வெடுத்த மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை அபரிமிதமாக பெய்துள்ளதால் சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் பல்வேறு நீர்நிலைகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி உள்ளன.
சென்னையிலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 22 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்பொழுது தண்ணீரின் அளவு 3.200 டிஎம்சி ஆக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 500 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் அளவு விநாடிக்கு 108 கன அடியாக உள்ளது.
கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. விரைவில் ஏரி நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications