வெயிலை விட இது மோசமானது.. தமிழகத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்குமாம்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது. இருப்பினும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து இன்று விடுக்கப்பட்ட வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
விழுப்புரம் (விழுப்புரம்) தலா 5, ராஜபாளையம் (விருதுநகர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) தலா 3, பர்லியார் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), மேட்டூர் AWS (சேலம்), குன்னூர் AWS (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 2, கூடலூர் பஜார் (நீலகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), செஞ்சி (விழுப்புரம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), தேவாலா (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 38.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2° குறைந்தும் ஏனைய இடங்களில் பொதுவாக பெரிய மாற்றம் எதுமின்றி இருந்தது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும், ஒருசில இடங்களில் இயல்பை விட 1-3° செல்சியஸ் குறைவாகவும் இருந்தது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-38° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25 மற்றும் 26ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27 தொடங்கி 30 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதே நேரம் 27 முதல் 29 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 26 முதல் 28 தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
27 மற்றும் 28ம் தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (24-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (25-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் முக்கியமான அம்சனம் என்னவெனில், வானிலையில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்று எச்சரித்திருப்பதுதான். வழக்கமாக வெயில் அதிகமாக இருந்தால் அதை சமாளிக்க உடலில் வியர்வை வெளியேறும். இதன் மூலம் உடல் குளிர்ச்சியாகி வெப்பம் தனியும். ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வியர்வை வராது. அதே நேரம் உடலின் வெப்பமும் அதிகரித்து காணப்படும். இதனால் உஷ்ண சோர்வு (Heat Exhaustion) அல்லது உஷ்ண பக்கவாதம் (Heat Stroke) ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அதிக ஈரப்பதம் ஆஸ்துமா அல்லது சுவாச நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். தவிர தோல் எரிச்சலும், பூஞ்சை தொற்றும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படியான சூழலில் உடலில் ஏற்பட்டிருக்கும் காயம் உடனே ஆறிவிடாது. எனவே தளர்வான ஆடையை அணிவது. அடிக்கடி தண்ணீர் குடிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். வெயில் நேரங்களில் முடிந்த அளவுக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக வானிலையை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாக சில வித்தியாசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை பருவம் தவறி பெய்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. இரு நாட்களுக்கு முன்னர் கோவையில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்திருந்தது. அதேபோல திருநெல்வேலியிலும் மழை கொட்டி தீர்த்திருந்தது. நேற்று விழுப்புரத்திலும் நல்ல மழை பெய்திருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்திருப்பது என்னவோ உண்மைதான்.
ஆனால், பருவம் தவறி பெய்த மழை காரணமாக விளை பயிர்கள் பாதிக்கப்படும். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என டெல்டா மாவட்டங்களில் திடீர் மழை நெல் பயிரை கடுமையாக பாதித்திருக்கிறது. விவசாயிகள் இழப்பீடு கேட்டு வருகின்றனர். மட்டுமல்லாது புதிய வகை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் உருவாகி அவை மனித உடலை தாக்கும். எனவே பருவம் தவறிய மழை புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பருவம் தவறிய மழை தற்போது தீவிரமாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டனில் வரலாறு காணாத வெயில் பதிவாகியிருந்தது. பிரிட்டன் அடிப்படையில் குளிர் பிரதேசம். இருப்பினும், அங்கு வெயில் பட்டைய கிளப்பியது. அந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானில் திடீரென வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 1700க்கும் அதிகமானோர் சிக்கி உயிரிழந்தனர். எனவே பருவம் தவறிய மழை ஆபத்தானதாகும்.












Click it and Unblock the Notifications