என்னங்க பெரிய ஊட்டி, கொடைக்கானல்! நெல்லை, தூத்துக்குடியில் 100 ஆண்டுகளில் இல்லாத குளிர்
சென்னை: டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளியே தலைகாட்டவில்லை. தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் சூழலில் கடும் குளிர் நிலவுகிறது. வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெல்லையில் பகல் நேரத்தில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் குளிரால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலும் இதுவரை இல்லாத அளவாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இடைவிடாமல் சாரல் மழை
டிட்வா புயலின் தாக்கம் இலங்கையை புரட்டி போட்ட நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டமும் அவ்வப்போது விட்டு சாரல் மழையும் பெய்து வந்தது. இரவிலும் தொடர்ந்து பெய்த மழை, இன்றும் மதியம் வரை பரவலாக பெய்தது.
மதியம் 2 மணிக்கு பிறகே மழை நின்றுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை மூலைக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன் கால்வாய் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக 16 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரம், நாங்குநேரி சுற்றுவட்டாரங்களிலும் இடைவிடாமல் நேற்று காலையில் இருந்து இன்று பிற்பகல் வரை தொடர்ந்தது.
100 ஆண்டுகளில் இல்லாத குளிர்
நெல்லை மாநகர் பகுதிகளில் டவுன், பேட்டை, வண்ணாரபேட்டை, நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்தது. அதே நேரம், மழையின் தாக்கத்தை விட குளிரின் தாக்கமே கடுமையாக உள்ளது. நேற்று பகல் நேரங்களில் சாலைகளில் வாகனம் தெரியாத அளவுக்கு மேகக்கவசம் காணப்பட்டது. இரவில் மிக கடுமையான குளிர் வாட்டியது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் நெல்லையில் பகல் நேரத்தில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வழக்கமாக வெயில் காலங்களில் தான் ஊட்டியில் 20 முதல் அதிகபட்சம் 25 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். இதனால் ஊட்டி, கொடைக்கானலில் உள்ள கிளைமேட்டை தற்போது தென் மாவட்ட மக்களும் இங்கு இருந்தபடியே அனுபவிக்க முடிந்துள்ளது.
தென்காசியிலும் கடும் குளிர்
தென்காசி மாவட்டத்திலும் நேற்று பகலில் தொடங்கி இன்றும் 2வது நாளாக இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. 3 நாட்களாக சூரியன் எட்டி பார்க்கவில்லை. இதனால், கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. இரவில் ஏற்பட்ட கடும் குளிரால் முதியவர்களும், பச்சிளம் குழந்தைகள் கொண்ட குடும்பங்களும் பெரும் அவதி அடைந்தர். மாலை 4 மணிக்கே வானம் இருட்டாக மாறுவதால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சாலைகளில் சென்றன. ஊட்டி, கொடைக்கானலில் தான் இருக்கிறோமோ என்று சொல்லக்கூடிய அளவுக்கு குளிர் இருப்பதாக மக்கள் தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது.
தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால் மக்கள் கடும் அவதி அடைகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
தூத்துக்குடியிலும் ஜில் கிளைமேட்
காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. தென் மாவட்ட மக்கள் இதுவரை கண்டிராத அளவாக ஊட்டி, கொடைக்கானல் போல ஜில் ஜில் என்று கிளைமேட் மாறியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இரவு நேரங்களில் குளிர் இன்னும் அதிகமாக காணப்பட்டதால் வயதானவர்கள், சிறு குழந்தைகளை வைத்து இருப்பவர்கள் கடும் சிரமப்பட்டனர். திருச்செந்தூரில் இதுவரை இல்லாத அளவாக நேற்று மதியம் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ள நிலையில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடும் குளிருக்கு மத்தியிலும் பல்வேறு இடங்களில் மக்கள் வழக்கம் போல் தங்கள் விவசாய பணிகளை தொடர்ந்ததை பார்க்க முடிந்தது. நாற்று நடுவது, வரப்பு வெட்டுவது என கடும் குளிக்கும் மத்தியிலும் விவசாய பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்தன.
பெங்களூரிலும் வாட்டி வதைக்கும் குளிர்
தமிழகத்தில்தான் இப்படி என்றால் அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் வழக்கத்திற்கு மாறாக குளிர் அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கடுமையான குளிர் நிலவுகிறது. குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த ஆண்டு குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
ஜெர்கின்கள், கையுறைகள், இன்றி வெளியே வர முடியாத நிலை நிலவுகிறது. இலங்கையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவே, பெங்களூரில் வெப்ப நிலை திடீரென சரிந்து கடும் குளிர் காணப்பட்டதாக வானிலை அதிகாரிகள் கூறினர். இன்னும் இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நீடிக்கும் எனவும் டிசம்பர் 2-வது வாரத்தில் இருந்து பெங்களூரில் வழக்கமான குளிர் காலம் தொடங்கும் எனவும் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 27 ஆம் தேதி பெங்களூரில் குறைந்தபட்ச வெப்ப நிலை: 19.4 டிகிரி செல்சியாக பதிவானது. 25 ஆம் தேதி 15.4 டிகிரி செல்சியாகவும் 28 ஆம் தேதி 18.5 டிகிரி செல்சியஸ் ஆக்வும் பதிவானது. குளிர் அதிகமாக உள்ளதால், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications