மீண்டும் ரெட் அலர்ட்.. தெறிக்கும் வெள்ளம்.. அதி கனமழையால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி முடங்கியது
திருநெல்வேலி: தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மீண்டும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8.30 வரைக்கும் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குற்றால அருவிகளிலும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வட மாவட்டங்களை பதம் பார்த்த வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களை சூறையாடிவருகிறது. அங்குள்ள அருவிகள், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல மணி நேரமாக கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது.

சாலைகள் எல்லாம் குளங்களாக மாறியுள்ளன. அணைகள் முற்றிலும் மளமளவென நிரம்பி வருவதால் பல ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
திருநெல்வேலியில் கொட்டித்தீர்த்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலப்பாளையம் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
மன்னார் வளைகுடா தற்போது மிக வலுவான மழை மேகங்களை உற்பத்தி செய்து வருகிறது. வரும் நேரங்களில், தென் மாவட்டங்களில் மீண்டும் அதீத கனமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்துள்ள கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குற்றால நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குற்றாலநாதர் ஆலயத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.
ஏற்கெனவே தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதீத கனமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நிலையில், வரும் நேரங்களில் மீண்டும் அதீத கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நாளை காலை 8.30 மணி வரைக்கும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மாலை 6 மணி நிலவரப்படி, திருவைகுண்டம் பகுதியில் 394 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு, தென் மாவட்டங்கள் மிக பெரிய இயற்கை பேரிடரை சந்தித்து உள்ளது. கடந்த 1963ம் ஆண்டு நெல்லை மாநகரத்தில் 293 மில்லி மீட்டர் மழை அளவு பதிவான நிலையில், இன்று 260 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தென்காசியில் இருந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி செல்லும் 15க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் அதிகனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர், நாசரேத் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
தென்மாவட்டங்களில் விடாமல் கொட்டி வரும் அதிகனமழையால் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. 4 மாவட்டங்களின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி - 0462-2501012
தூத்துக்குடி - 0461-2340101,கன்னியாகுமரி- 04652-231077, தென்காசி - 04633-290548, அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்: 1070, 1077
வாட்ஸ் அப் எண்: 9445869848.












Click it and Unblock the Notifications