இன்னையிலிருந்து.. சென்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு! வடகிழக்கு பருவமழை குறித்து குட் நியூஸ்!
சென்னை: தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை போதிய அளவுக்கு மழையை கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருகிக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 2 பருவமழைகள் போதுமான அளவுக்கு மழைப்பொழிவை கொடுக்கும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றத்தை தான் கொடுத்தது.

தமிழகத்தில் பருவமழை
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை நீடிக்கும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள்தான் டார்கெட். இந்த 4 மாதங்களில் 939.7 மி.மீ அளவுக்கு தமிழகத்தில் மழையை கொடுக்கும். இது மாநிலத்தின் மொத்த மழை அளவில் 32% ஆகும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதனால் காவிரியில் நீர் வரத்து இல்லை. இது டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதித்தது.
டெல்டாவில் வெளுக்கும் மழை
இப்படி இருக்கையில்தான் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. என்னதான் தென்மேற்கு பருவமழை முதலில் தொடங்கினாலும்.. லேட்டாக தொடங்கும் வடகிழக்கு பருவமழைதான் கெத்து. தமிழகத்திற்கு தேவையான மழையில் பெரும்பாலனது வடகிழக்கு பருவமழையிலிருந்துதான் கிடைக்கிறது. அந்த வகையில் இன்னைக்கு அதிகாரப்பூர்வமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. கடந்த ஒரு வாரமாகவே டெல்டா மாவட்டங்களில் மழை அப்படி, இப்படி பெய்து வந்த நிலையில்.. இன்று அடி வெளுத்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில், "சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் கட்ட மழை தொடங்குகிறது. அடுத்த 2 வாரங்களில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம்.
வெதர்மேன் சொன்ன குட் நீயூஸ்
குறிப்பாக அவ்வப்போது திடீர் மழைப்பொழிவு மற்றும் அதைத் தொடர்ந்து இடைவெளிகள் இருக்கும். சில சமயங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யாது. மழைப்பொழிவுக்கு இடையே வெயில் அல்லது மேகமூட்டமான சூழல் நிலவும். மழையின் நேரம், கால அளவு மற்றும் தீவிரம் ஆகியவை இடத்திற்கு இடம் மாறுபடும். விட்டு விட்டு பெய்யும் மழை என்பதன் பொருள், ஒவ்வொரு இடத்திலும் தினமும் அல்லது ஒரே நேரத்தில் மழை பெய்யும் என்று அர்த்தமல்ல.
நல்ல மழைதான்
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும் பேட்டன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் வெளியே செல்லும்போது குடை அல்லது ரெய்ன் கோட் எடுத்துச் செல்லுங்கள்! அடுத்த திடீர் மழை எப்போது உங்களை எதிர்பாராத விதமாக நனைய வைக்கும் என்று சொல்ல முடியாது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் சென்னைக்குச் சிறப்பாக அமையவுள்ளது. எல்லா மழையும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடாது; நமக்கு இந்த மழை அவசியம். எனவே, வடகிழக்கு பருவமழையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்" என பதிவிட்டிருக்கிறார்.
சென்னை வானிலை மையம்
அதேபோல, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் அறிக்கையில், "இன்று நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது, அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பாதை
சுமார் 3.1 கிமீ உயரம் வரை தெற்கு ஸ்ரீலங்கா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 3.1 கிமீ உயரம் வரை தெற்கு ஸ்ரீலங்கா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
எங்கெல்லம் இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு?
இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கல்லக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
