சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்.. பத்தினம்திட்டா முழுக்க ‘ரெட் அலர்ட்’.. நிலச்சரிவு வார்னிங்!
திருவனந்தபுரம்: சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு பருவமழை கேரளாவுக்கு பெரிய அளவுக்கு கை கொடுக்கவில்லை. எனவே அம்மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளவை எட்டவில்லை. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்படி இருக்கையில் வடகிழக்கு பருவமழையின் ஆட்டம் தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை தொட்டிருக்கிறது. எனவே கடந்த சில நாட்களாக கேரளா தொடர் மழை பொழிவை சந்தித்து வருகிறது.

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்லும் இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கல் என்னவெனில் தற்போதுதான் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு வந்தவாறு இருக்கின்றனர். எனவே இந்த மழை பக்தர்களுக்கு பெரும் இடர்பாட்டை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் வருகை இப்போதே எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் சிறப்பு ரயில்கள், விமானங்களில் இருமுடி அனுமதி என பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
இது பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கோயில் நிர்வாகமும், பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகமும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. எனவே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் பம்பை நதியில் நீராடுவது வழக்கம். ஆனால் மழை இதேபோல தொடர்ந்தால் பம்பையில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே பம்பை நதியின் நீரோட்டத்தையும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பாலக்காடு மாவட்டம் திரிதலாவில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சித்தூர் மற்றும் பட்டாம்பி மற்றும் களமசேரியில் தலா 8 செ.மீ, குருடமண்ணில் குன்னம்குளம், சீத்தோடு மற்றும் குன்னம்குளம் பகுதியில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பெரும்பாலானவை பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல அடுத்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை இடி மின்னலுடன் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்வோர் உரிய முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications