வறுத்தெடுக்கும் வெப்பம்! தமிழகத்தில் 8 இடங்களில் சதம்! செப்டம்பரிலும் இப்படியா? கருணை காட்டாத வெயில்
சென்னை: தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் போல் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் வெளியில் செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இல்லாத அளவிற்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 100.7 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக ஒரு சில இடங்களில் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இரவில் திடீரென மழை பெய்து குளிர வைத்தது.

அதன் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமானது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. கோடைக்காலம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் கோடைக் காலம் திரும்பி வந்துவிட்டதோ என மக்கள் நினைக்கும் அளவிற்கு வெயில் உக்கிர தாண்டம் ஆடி வருகிறது. சென்னை, திருவள்ளூர், மதுரை, தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெயிலின் அளவு அதிகமாக இருந்தது.
பகல் நேரத்தில் வெளியில் செல்லவே அச்சப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. நேற்று சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. அதிகபட்ச வெப்ப நிலையாக மதுரையில் 39.8 செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக ஈரோட்டில் 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் வெயில் கொளுத்து எடுத்துள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், ஈரோடு 103 டிகிரி பாரன்ஹீட்டும், நாகை, தஞ்சையில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், கரூர், சென்னை, பாளையங்கோட்டையில் 101 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவானது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக செப்டம்பர் மாதத்தில் இந்த அளவிற்கு வெப்பநிலையானது பதிவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை பதிவானதில் 5வது அதிகபட்ச வெப்பநிலையாக 100.76 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் குறைந்தபட்சமாக வால்பாறையில் 77 டிகிரி பாரன்ஹீட்டும், குன்னூரில் 75 டிகிரி பாரன்ஹீட்டும் கொடைக்கானலில் 70 டிகிரி பாரன்ஹீட்டும், உதகையில் 67 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவானது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை எப்போது பெய்யும் என்ற எதிபார்ப்பு மக்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications