அக்டோபர் 15 வரை தான் டைம்.. சென்னை டூ கன்னியாகுமரி.. ஒப்பந்ததாரர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு
சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-வது வாரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது. எனவே மழைக்கு முன்பாக சாலைப்பணிகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கால்வாய் பணிகளையும் விரைவுப்படுத்தி உள்ளது. இதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழையை காட்டினாலும், வடகிழக்கு பருவ மழையால் தான் அதிக மழை கிடைக்கும். அதேநேரம் வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை, சென்னைக்கு பெரும்பாலும் துயரமாகவே இருக்கும். இதற்கு காரணம்.. ஒரே நாளில் அதிகப்படியான மழை பெய்வது தான். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு நாளில் வடிந்துவிடும். ஆனால் சென்னையில் அப்படி இல்லை.. கடுமையான பாதிப்பு ஏற்படும்.

குறைந்தது ஒரு வாரமாவது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயமும் அதிகமாக ஏற்படும். ஓரளவு பெரிய மழை எதுவும் சென்னையை தாக்காத வரை பிரச்சனை இல்லை..மாறாக அதிக மழை பெய்தால், அதனை தாங்கும் வகையில் கட்டமைப்புகள் இல்லை. அரசு தற்போது ஓரளவு ஏற்படுத்தி உள்ளது. எனினும் இதுவுமே 20 செமீ அளவிற்கு தான் தாங்கும் என்கிறார்கள். அதற்கு மேல் என்றால், பாதிப்பு ஓரளவு ஏற்படவே செய்யும் என்கிற நிலையே இருக்கிறது.
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-வது வாரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழக அரசு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக தொடங்கி இருக்கிறது. மழை எவ்வளவு பெய்தாலும், மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மழையால் மக்கள் பாதிக்கப்படாது என்பது உறுதியாக உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரே நேரடியா கண்காணிப்பில் இறங்கி உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு மழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
அதன் விவரங்களை பார்ப்போம்.
* மழை நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு வசதியாக மழை நீர் வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி வைக்க வேண்டும்.
* நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக், மணல் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.
* சாலைகளில் தோண்டப்பட்ட அனைத்து பள்ளங்களும் மூடப்பட வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும். அனைத்து சாலை பணிகளையும் அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
* மழைக்கு சாயும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அதனை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
* மழைக்கு விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை முன்பே கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் மூலம் அகற்ற வேண்டும்.
* பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க முக்கிய சாலைகள், ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
* மழைக்காலத்தில் குடிநீர் வினியோகம் தடைபடக் கூடாது. சீரான வினியோகம் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
* நீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முடிக்க வேண்டும். அதே வேளையில் இந்த பகுதிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
* வார்டு வாரியாக தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். அதற்கான இடத்தை தேர்வு செய்து வைத்து கொள்ள வேண்டும்.
* கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு அதனால் வரும் நோய்களை முற்றிலும் தடுக்க வேண்டும்.
* நகர்ப்புற சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும்.
* மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications