சண்டே ஸ்பெஷல்.. சென்னையை மொத்தமாக நனைக்கப்போகும் மழை! தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நாளை சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டிருந்தது. வழக்கமாக கோடைக்காலத்தில் வேலூர் தொடங்கி ஈரோடு வரை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை கோவை, நீலகிரி என வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. ஊட்டியில் இதுவரை பதிவாகத அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. எனவே நீர் நிலைகள் முற்றிலும் காய்ந்து போயின. எதிர்பார்த்த அளவுக்கு குளுமை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. அதேபோல உள்ளூர் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலகிரியில் இந்த நிலைமை எனில், மற்ற மாவட்டங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. ஆனால் இந்த வெயில்தான் வெப்பச்சலனத்தை ஏற்படுத்தி நல்ல மழையை கொண்டு வந்தது.
எங்கெல்லாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்ததோ அங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கியது. மே மாதத்தின் இறுதியில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்திருந்தது. ஆனால் சென்னையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஜூன் தொடக்கத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பொளந்து எடுத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் தணிந்து, பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். இது குறித்து x தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது
நாளை பிரகாசமான நாள். காற்று திசை மாற்றி வீசும், அதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் மழையும் பெய்யும். புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், மதுரை, திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், புதுச்சேரி, கடலூர், தஞ்சை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34" -35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications