திடீரென யூ டர்ன் எடுத்த புயல்! கரையை கடப்பதில் ஏற்பட்ட மாற்றம்.. வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்!
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமான புயலாக வலுப்பெற்றிருக்கிறது. புயல் காரணமாக வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இப்புயல் இன்று மாலை புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில், இதன் திசையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது இந்த மாற்றம் ஏன்? என்பது குறித்தும் விளக்கியுள்ளனர்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் புயல் உருவாகி வருகிறது. இந்த ஆண்டும் புயலுக்கான அறிகுறியாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருந்தது. இது அந்தமான் நிகோபர் பகுதியிலிருந்து மெல்ல நகர்ந்து வடமேற்கு திசைக்கு வந்தது. இப்படியே நகர்ந்திருந்தால் தெற்கு இலங்கையை ஒட்டிய பகுதியில் கரையை கடந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மாறாக, தன்னுடைய திசையை மாற்றி வடக்கு நோக்கி நகர தொடங்கியது. சரியாக சொல்வதெனில் நவ.25ம் தேதி இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டது.

மறுபுறம் இந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறவும் தொடங்கியது. வளிமண்டல சுழற்சி என்கிற நிலையிலிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை எட்டியது. நவ.26 தொடங்கி 27ம் தேதி வரை முழுவதும் வடக்கு நோக்கி இது நகர்ந்து வந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கிழக்கு இலங்கையின் கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பின்னர் இது வடக்கு இலங்கையை ஒட்டி கரையை கடந்து ராமேஸ்வரம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் அப்படியும் நடக்கவில்லை. நவ.28ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த மண்டலமாக இது வலுப்பெற்றது. மட்டுமல்லாது வடமேற்கு நோக்கி நகர வேண்டிய இது, வடகிழக்கு நோக்கி நகர தொடங்கியது. இப்படியாக புயலின் பாதையை கணிக்க முடியாமல் வானிலை ஆய்வாளர்கள் குழம்பி வந்தனர். பின்னர் மீண்டும் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு அதாவது புதுவையை பகுதியை நோக்கி திரும்பியது.
அப்போதும் சில குழப்பங்கள் நீடித்தன. காரணம் புயல் நகரும் வேகம்தான். அதற்கு முன்னர் வரை 15-30 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென புதுவையிலிருந்து 300 கி.மீ தொலைவில் நங்கூரம் இட்டதை போல நின்றுவிட்டது. அதுவரை திரண்டிருந்த மேகங்கள் அனைத்தும் கடலிலேயே மழையாக கொட்டி தீர்த்தது. எனவே கடலில் இது தற்காலிக புயலாக மாறி பின்னர் மீண்டும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படியும் நடக்கவில்லை. நேற்று காலை முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரிக்க தொடங்கியது. மட்டுமல்லாது காற்றின் வேகமும் அதிகரித்தது. இதன் அர்த்தம், தாழ்வு மண்டலம் வலுவிழக்காமல், தீவிரமடைகிறது என்பதுதான். எனவே, புயலாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதற்கு பெங்கல் (ஃபெஞ்சல்) எனவும் பெயரிடப்பட்டது.
இப்புயல் புதுவையை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணிப்புகளை பொய்யாக்குவதே இதன் வேலையாக மாறிவிட்டதே. எனவே இந்த கணிப்பையும் பொய்யாக்கி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்க இருக்கிறது. இதனை தனியார் வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான் புயல் இடம் மாறுவதற்கான காரணமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வளிமண்டல சுழற்சியும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், காற்றின் உயர் அழுத்த பகுதி புயலின் திசையை மாற்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications