திருச்செந்தூரில் அமாவாசை அதுவுமாக குளித்த பக்தர்கள்! திடீரென 100 அடி பச்சை பசேல் என தெரிந்த காட்சி
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே உள்ள கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்படுகிறது. இது வழக்கமான ஒரு நிலை என்றாலும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அங்கு நின்று கொண்டு செல்ஃபி எடுக்கும் விவகாரங்களில் ஈடுபட்டு வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த கோயில் அனைத்து தோஷங்களுக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. திருமண தடை, குழந்தையின்மை, வேலையின்மை, குடும்பத் தகராறு, மரண பயம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் இந்த கோயிலுக்கு வருவோருக்கு அவர்கள் மகிழும்படியான பதில் கிடைக்கிறது.
இதனால் திருச்செந்தூர் கோயிலுக்கு பலர் வந்து செல்கிறார்கள். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருச்செந்தூர் கடல் பகுதியில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவது வழக்கம். இதற்கிடையில் பெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் 26 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் இன்று சென்னை பகுதியில் கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் திடீரென திருச்செந்தூர் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் சுமார் 100 அடிக்கு உள்வாங்கி காணப்படுகிறது.
இன்று அமாவாசை என்பதால் கடல் உள்வாங்கி காணப்பட்டாலும், இன்றைய தினம் பெஞ்சல் புயல் கரையை கடப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பாசிப்படிந்த பாறைகள் வெளியே தெரிகின்றன.
அதன்மேல் நின்றபடி ஆபத்தை உணராமல் கடலை ரசித்து கொண்டிருக்கும் பக்தர்கள் அங்கு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். அவர்களை போலீஸார் விரட்டி வருகிறார்கள். கடந்த இரு தினங்களாக திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது. ஆனாலும் பக்தர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் கடலில் நீராடிவிட்டு சுவாமியை தரிசித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications