அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.. கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மர்- வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, நவம்பர் 7, நவம்பர் 8 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாட்டின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. தமிழக உள்பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, நாளை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தலா 8 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தலா 7 செமீ, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருவாரூர் மாவட்டம் கொடவாசல், பெரம்பலூர் மாட்டம் வேப்பந்தட்டை, விழுப்புரம் மாவட்டம் வல்லம், மரக்காணம், வானூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications