வேளச்சேரி மேம்பாலங்களில் கார்களை அகற்றிய உரிமையாளர்கள் செய்த வேலையை பாருங்கள்! விபத்து அபாயம்!
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகி சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலங்களில் அப்பகுதியை சேர்ந்த கார் உரிமையாளர்கள் கார்களை நிறுத்தினர். இந்த நிலையில் மழையும் ஓய்ந்த நிலையில் தங்கள் கார்களை உரிமையாளர்கள் எடுத்துச் சென்ற நிலையில் , கார்கள் நகராமல் இருக்க 4 டயர்களிலும் வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றாமல் அப்படியே சென்றுவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
சென்னையில் எப்போது மழை பெய்தாலும் சில இடங்களில் எதிர்பாராத அளவுக்கு தண்ணீர் தேங்கும். அந்த வகையில் வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், தாம்பரம், உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களுக்கு இன்னலை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து வருகிறது. அது போல் அவர்கள் வாங்கி வைத்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் எல்லாம் நீரில் மூழ்கி பழுதடைகின்றன.

இதனால் கடந்த ஆண்டு முதல் வேளச்சேரி மக்கள் தங்கள் கார்களை மேம்பாலங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். எனினும் சிலரது கார்கள் கடந்த முறை பெய்த மழைக்கு பழுதடைந்து அதிக செலவை வைத்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவானது. இது சென்னை- புதுவைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.
மேலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் கார்களை வியாழக்கிழமையே கொண்டு வந்து மேம்பாலங்களில் நிறுத்தி விட்டனர். அப்போது அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் காரை எடுக்க கூறியும் அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் கார் மழையில் மூழ்கி அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதை விட போலீஸார் விதிக்கும் ரூ 1000 , 2000 அபராதத்தை செலுத்தி கொள்ளலாம் என்ற முடிவுடன் இருந்தனர்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் ,மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து காற்றழுத்தமானது, தெற்கு ஆந்திரா நோக்கி சென்றுவிட்டதால் நேற்று முன் தினம் முதல் மழை இருக்காது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்தும் மேம்பாலங்களில் உள்ள கார்களை எடுக்காமல் இருந்தனர்.
நேற்றைய தினம் மழை இல்லை, வெயில் வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்கள் மேம்பாலங்களுக்கு வந்து கார்களை எடுத்தனர். அதாவது கார்களை விடும் போது மேம்பாலத்தின் வளைவு சுளிவுகளால் கார்கள் நகராமல் இருக்க அதன் டயர்களுக்கு கற்களை வைத்திருந்தனர். ஆனால் காரை எடுத்த இவர்கள் அந்த கற்களை அப்புறப்படுத்தாமல் விட்டுச் சென்றனர். இதனால் அந்த மேம்பாலங்களில் பயணித்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

சிலர் கற்களின் மீது தெரியாமல் மோதியதில் கீழே விழும் நிலைக்கும் சென்றனர். இதையடுத்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளே கற்களை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், கார்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக உரிமையாளர்கள் கற்களை தேடி கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றனர். மேலும் போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்த போதும், வியாக்கியானம் பேசினர்.
ஆனால் கார்களை எடுக்கும் போது அந்த கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படி இவ்வளவு கற்களை சாலைகளிலேயே போட்டுவிட்டு சென்றனர். இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்கள் அதில் நிலைத்தடுமாறி விழுந்தால் விபத்து ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே இனியாவது இவர்கள் எல்லாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications