இரவு திடீரென கொட்டிய மழை.. பறிபோன 19 உயிர்கள்.. துர்கா பூஜையில் நடந்தது என்ன? பகீர் பின்னணி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை விழாவின்போது பெய்த திடீர் கனமழையால், ஏற்கெனவே மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த பந்தலுக்குள் பக்தர்கள் ஒரே நேரத்தில் நுழைய முயன்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் காயமடைந்தனர். கொல்கத்தாவில் என்ன நடந்தது.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
வட இந்தியாவில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக நடைபெறும். அதிலும் குறிப்பாக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இது ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் களைக்கட்டும். இதற்கிடையே நேற்றைய தினம் கொல்கத்தாவின் மத்திய அவென்யூ பகுதியில் உள்ள ராம் மந்திர் அருகே அமைந்துள்ள சோர்பகன் சர்வஜனின் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் துயரம் ஏற்பட்டது.

திடீர் மழை
அதாவது அங்கு திடீரென மழை பெய்துள்ளது. மழையிலிருந்து தப்பிக்க மக்கள் பந்தலுக்குள் நுழைய முயன்றபோது, அங்கு ஏற்கெனவே அதிக அளவில் கூட்டம் இருந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், "துர்கா பூஜையைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அப்போது திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. மழையிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் பந்தலுக்குள் நுழையத் தொடங்கினர். ஆனால், உள்ளேயும் ஏற்கெனவே அதிக கூட்டம் இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.
மக்கல் புகார்
பந்தலுக்குள் நுழைவதற்கான வழியும் வெளியேறுவதற்கான வழியும் மிகவும் குறுகலாக இருந்ததாகவும் போதிய வெளிச்சமும் இல்லை என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தார். கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தவர்களை சிலர் மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் சென்றதாகவும் இல்லை என்றால் உயிரிழப்பு இன்னும் மோசமாகி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மழை பெய்யத் தொடங்கியதும், பந்தலுக்கு வெளியே காத்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் முன்னோக்கி நகர்ந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்போது சிலர் சாலையில் விழுந்தனர். இதையடுத்து கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதுவே கூட்ட நெரிசல் ஏற்பட பிரதான காரணமாக இருந்துள்ளது.
உயிரிழப்பு அதிகரித்திருக்கும்
சம்பவம் நடந்தவுடன் உடனடியாக காயமடைந்தோரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். காயமடைந்தவர்கள் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஜை ஏற்பாட்டாளர்களும் உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
துர்கா பூஜை
சோர்பகன் சர்வஜனின் துர்கா பூஜை என்பது கொல்கத்தாவில் கோலாகலமாக துர்கா பூஜை நடக்கும் இடங்களில் முக்கியமானது.. இந்த ஆண்டு 91வது ஆண்டாக துர்கா பூஜை கொண்டாடப்பட்டது.. சப்தமி தினமான சனிக்கிழமை பிற்பகலில் கொல்கத்தா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. சிறிது நேரம் மழை நின்றிருந்த நிலையில், மாலையில் மீண்டும் கனமழை பெய்தது.
அதாவது மழை நடுவில் நின்றவுடன் பூஜை நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். கூட்டம் இருந்ததால் பலர் வெளியே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது திடீரென மழை ஆரம்பித்த நிலையில், அதிலிருந்து தப்பிக்க மக்கள் ஒரே நேரத்தில் பந்தலுக்குள் நுழைய முயன்றதே இந்த துயர சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது..




Click it and Unblock the Notifications
