மாலையே கரையை கடக்கும் பெஞ்சல் புயல்! பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் விளக்கம்
திருச்சி: பெஞ்சல் புயலுக்கு பின்னர் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று அல்லது நாளை காலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு சில தினங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டுக்கு நேற்றும் இன்றும், திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்றும் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மழையின் தன்மையை பொருத்து விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் 7 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்தாலும் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீர் படிப்படியாகத்தான் குறையும். இது போல் பள்ளிகளிலும் தண்ணீர் தேங்கியிருக்கும். இன்னும் சில பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்படுகின்றன. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது: சென்னை உள்பட தமிழகத்தில் மழை, புயல் பாதிப்பால் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு அமர்ந்து மாணவர்கள் படிக்கும் அளவுக்கு சீரமைக்கப்பட்டதும் பள்ளிகளை
திறக்க வேண்டும் என முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அன்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கனமழை தொடரும். காற்றும் அதிகப்படியாக வீசி வருகிறது. ஆனால் இந்த ஆபத்துகளை உணராத மக்கள் கடற்கரைக்கு செல்கிறார்கள்.
அங்கு புயலை பார்க்க சென்றுள்ளதால் அவர்களை போலீஸார் எச்சரித்தாலும் ஏதாவது ஒரு வழியாக உள்ளே சென்று விடுகிறார்கள். இன்று அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில் தற்போது 19 அடிக்கு நீர் உள்ளது. சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகளில் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.












Click it and Unblock the Notifications