For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பராக்.. பராக்..ஆழ்வார்பேட்டை வினோத் வீடியோ விஷன் முதல் பெங்களூரு ஜெயில் வரை.. யார் இந்த அதகள சசிகலா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை, கலவரத்துக்கு சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டி இருக்கின்றனர். இந்த பழியை அதிமுக மீது போட திட்டமிட்டுள்ளனர் என அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக கூறியிருக்கிறார். அதற்கு இந்த சதியை தடுக்க வேண்டும் என டிஜிபி திரிபாயிடம் அமைச்சர்கள் படை மனு கொடுத்துள்ளது.- இது சென்னை நிலவரம்!

பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் சசிகலாவை ஆதரித்து 100க்கும் மேற்பட்டவர்கள் முழக்கமிட்டனர் - இது பெங்களூரு நிலவரம்

Who is Sasikala? To capture again AIADMK?

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரே! ராஜமாதாவே! எடுத்த சபதம் முடிக்க வருகை தரும் சின்னம்மாவே! - இது தமிழக நகரங்களில் திடீர் திடீர் என முளைக்கும் நள்ளிரவு சுவரொட்டி வாசகங்கள்.

-இப்படி அதிமுகவையே அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சசிகலா யார்? கட்சியை நிறுவிய எம்.ஜி.ஆரின் உறவினரா? அதிமுகவின் ஆரம்ப கால தொண்டரா? அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்தவரா? யாருங்க இந்த சசிகலா..

1956-ம் ஆண்டு ஆக.18-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன்- கிருஷ்ணவேணி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் சசிகலா. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு இடம்பெயர்ந்தது இந்த குடும்பம். சசிகலாவின் படிப்பு 10-ம் வகுப்பு.

1973-ம் ஆண்டு அக்.16-ல் விளார் கிராமத்தை சேர்ந்த ம. நடராஜனை திருமணம் செய்து கொண்டார் சசிகலா. இந்த திருமணத்தை நடத்தி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

1980களில் சசிகலாவின் கணவர் ம. நடராஜன் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக அரசுப் பணியில் இருந்தார். அந்த கால கட்டத்தில்தான் ஜெயலலிதா எனும் மாஜி நடிகையை எம்ஜிஆர் அரசியலுக்குள் கொண்டு வந்தார். அதிமுகவின் பொதுச்செயலாளர், ராஜ்யசபா எம்.பி. என அப்போது கட்சியில் எழுந்த கடும் எதிர்ப்புகளை மீறி ஜெயலலிதா எனும் அரசியல் தலைவரை உருவாக்கினார் எம்ஜிஆர். இதற்கு அரசு இயந்திரத்தை முழு வீச்சிலும் பயன்படுத்தினார் எம்ஜிஆர்.

இங்கிருந்துதான் சசிகலா எனும் இன்றைய சோ கால்ட் ராஜமாதாவின் அத்தியாயமும் தொடங்குகிறது. கடலூரில் ஜெயலலிதா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அந்த கூட்டத்தை வீடியோ பதிவு செய்வதற்கு மக்கள் தொடர்பு அதிகாரி ம. நடராசனின் வினோத் வீடியோ விஷனை ஏற்பாடு செய்தார் ஆட்சியராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ். வினோத் வீடியோ விஷனை சென்னை ஆழ்வார்பேட்டை பீமண்ண தோட்டம் எனும் பகுதியில் நடத்திக் கொண்டிருந்தவர்தான் சசிகலா.

வீடியோ பதிவில் ஜெயலலிதாவுடன் தொடங்கிய நட்பு மெல்ல மெல்ல நெருக்கமானது. ராஜ்யசபாவுக்கு ஜெயலலிதா செல்லும் போது உடன் பயணிக்கிற இடத்தையும் சசிகலா பெற்றார். எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை சசிகலா, அவரது குடும்பம் இருந்த இடம் யாருக்கும் தெரியாது. 1987 டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். காலமானார். அப்போது ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக நின்றது.

எம்.ஜி.ஆர். உடல் ஏற்றப்பட்ட ராணுவ வண்டியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு நடுரோட்டில் விழவைக்கப்பட்டார் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவை ஒரு தலைவராக ஏற்றுக் கொண்டது அதிமுகவின் ஒரு பிரிவு. அன்றைய காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்களாக இருந்தவர்கள் சசிகலாவின் உறவினர்கள். ஜெயலலிதா எனும் தலைவரின் அறிவிக்கப்படாத ஆலோசகரானார் சசிகலாவின் கணவர் நடராஜன்.

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக சென்னை போயஸ் கார்டன் இல்லத்திலேயே குடியேறியேவிட்டார் சசிகலா. ஜெயலலிதா கைகளுக்கு அதிமுக முழுமையாக வந்தது முதல் சசிகலா, அவரது கணவர் நடராஜன், சசிகலாவின் உறவினர்கள் நிழல் அரசாங்கத்தையும் நிழல் அதிமுகவையும் நடத்தி வந்தனர். 1991-96 கால கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சசிகலா அண்ட் கோவின் ஆட்டம் பகிரங்கமாகவே இருந்தது. தமிழகமே இந்த அண்ட்கோவின் ஆட்டத்தால் ஆடிப் போனது. இதன் உச்சமாக நடந்தது சசிகலா உறவினர் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து இந்தியாவையே அதிரவைக்கும் அளவுக்கு ஆடம்பர திருமணத்தை நடத்தி வைத்தார்.

அப்போது பிறந்த ஒரு வார்த்தை மன்னார்குடி மண்ணுக்கே இன்றளவும் களங்கமாகவும் இருக்கிறது. சசிகலா அண்ட்கோவுக்கு மக்கள் கொடுத்த பெயர் மன்னார்குடி மாஃபியா என்பதுதான்.

1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்க காரணமானவர்கள் இந்த சசிகலா அண்ட் கோதான். சசிகலா அண்ட் கோவின் தலையீடுகள், ஆட்டங்கள் ஜெயலலிதாவுக்கும் தெரிந்துதான் நடந்தது. ஒருகட்டத்தில் சசிகலா, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது, பின்னர் சேர்த்துக் கொள்வது என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தையும் ஜெயலிதா ஆடினார். ஆனால் ஜெயலலிதா அம்மாவின் நிழலாக சசிகலா எனும் சின்னம்மா உருவானார்.

அதிமுகவின் அத்தனை நிகழ்வுகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக சசிகலாவும் அவரது குடும்பமும் வியாபித்து கிடந்தனர். வினோத் வீடியோ விஷன் நடத்திய சசிகலா இன்றைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகளின் அதிபதியாகி இருக்கிறார். அத்தனையும் சட்டவிரோதமான முறைகளில் சம்பாதித்தவை என்பதை இந்த தேசமே நன்கு அறியும். ஜெயலலிதாவின் ஏற்றம், இறக்கம், இறப்பு என அத்தனையிலும் சசிகலாவின் பங்கு இல்லாமல் இல்லை.

ஜெயலலிதா எனும் ஆளுமை மறைவுக்குப் பின்னர் நிழல் உலக சின்னம்மா தன்னை பகிரங்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டார். புதிய ஜெயலலிதாவாக தம்மை உருமாற்றிக் கொண்டார். ஜெயலலிதா காலத்தில் அடைய முடியாத அரசியல் ஆசைகளை நோக்கி சசிகலா பயணப்பட்டார். சசிகலாவை எம்.எல்.ஏக்கள் முதல்வராகக் கூட தேர்ந்தெடுத்தனர்; அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று போயஸ் கார்டனுக்கு போய் சசிகலாவே தஞ்சம் என தேவுடு காத்து கிடந்தனர் இன்றைய அமைச்சர்கள்.

நேர்மையே வெல்லும் என்பதைப் போல எல்லாவற்றையும் எளிதாக பெற முடிந்த சசிகலாவால் நீதியை மட்டும் விலைக்கு வாங்க முடியவில்லை. சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்த வழக்கில் சசிகலா ஏ2 என அடையாளப்படுத்தப்பட்டு தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏ3 ஆக சசிகலாவின் உறவினர் இளவரசி, ஏ4 என சசிகலாவின் உறவினர் சுதாகரன் ஆகியோரும் பெங்களூரு சிறையில் தள்ளப்பட்டனர். இவர்களுக்கான 4 ஆண்டுகால சிறைவாசம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால் சசிகலாவின் ஆட்டம் ஓயவில்லை. பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் ஆகும்போதே அதிமுக கொடியை ஜெயலலிதா பயன்படுத்திய காரில் கட்டிக் கொண்டு பவனி வந்தார். சசிகலா சிறைக்குப் போகும் போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்தார்; அதனால் அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமை சசிகலாவுக்கு இருக்கிறது என்கிறார் டிடிவி தினகரன்.

இந்த 4 ஆண்டுகாலத்தில் அதிமுகவில் எத்தனையோ தலைகீழ் மாற்றங்கள் வந்துவிட்டன. அன்று சசிகலாவினால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடியார் இன்று சசிகலாவை அதிமுகவிலேயே சேர்க்கமாட்டோம் என போர்க்கொடி தூக்குகிறார். சசிகலாவால் முதல்வர் பதவியை பறிகொடுத்த ஓபிஎஸ் தரப்போ, சசிகலாவை வரவேற்க காத்திருக்கிறது என்கிறார்கள்.

இன்னும் 2 நாட்கள்தான் பிப்வரி 8 அன்று சசிகலா வருகையின் போது நடக்கப் போகும் நிகழ்வுகளுக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள்!

English summary
Sasila will come to Tamilnadu on Feb 8. AIDMK may face trouble for Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X