For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தாண்டின் சுவாரஸ்யமான ‘என்ட்ரி’ ! - பா. கிருஷ்ணன்

Google Oneindia Tamil News

நம் நாட்டில் சினிமா, அரசியல் ஆகியவற்றுக்கு அடுத்து மிகச் சிறந்த பொழுதுபோக்காக சோதிடத்தை வரிசைப்படுத்தலாம்.

2020ம் ஆண்டு தொடங்கியபோது பல சோதிடர்கள் வானத்தில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் ஏதோ தாளில் கட்டம் போட்டு கணித்துச் சொன்னவற்றில் குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் பொருளாதாரம் உயரும். சுபிட்சம் ஏற்படும். மகேந்திர சிங் தோனி சாதனை புரிவார். ரஜினி காந்த் அரசியலில் குதிப்பார். நட்சத்திரம், சூரியனையெல்லாம் வைத்து ஆரூடம் கூறியவர்கள், ஒரு வேளை வானில் உள்ள மேகங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், துல்லியமாகச் சொல்லியிருப்பார்களோ தெரியாது.

 Writer PaKis Article on Jothidam

மறைந்த அப்துல் கலாம் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாவது குறித்துக் கனவு கண்டார். அவர் கண்டது சோதிடம் அல்ல. இன்னின்ன வகையில் திட்டங்களை வடிவமைத்து, அவற்றைச் சரியாகச் செயல்படுத்தினால் இந்தியா வல்லரசாகும் என்பதே அவர் சொன்ன வழி. அதைக் காற்றில் பறக்கவிட்டது ஒருபுறம் இருக்க, கடைசியில் எந்த சோதிடமும் கண்டுபிடிக்காத கோவிட் 19 என்ற தீநுண்மி வந்து உலகையே புரட்டிவிட்டது. இன்னும் அதன் பிடியிலிருந்து உலகம் மீளவில்லை.

நாஸ்டர்டாமஸ் அதைப் பற்றிக் குறிப்பிட்டதாக யாருமே கூறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

கொரோனாவால் பொது முடக்கம் ஏற்பட்டு, உலகமே திணறிப் போய் பொருளாதாரம் ரொம்பவும் நோஞ்சானாகி ஐசியு- வுக்குப் போனது. தோனி கிரிக்கெட்டுக்கே குட்பை சொல்லிவிட்டார். சூப்பர் ஸ்டார் அவ்வப்போது ஏதாவது சொல்லி, எல்லோரையும் எதிர்பார்ப்புகளிலேயே மிதக்கச் செய்தார். கடைசியில் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று கூறி முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.

இப்படி 'சோதிட என்டர்டெய்ன்மென்ட்' நமக்கெல்லாம் புதிதல்ல. நமது மறதியால் பலவற்றை நினைவில் வைத்திருப்பதில்லை. 1991ம் ஆண்டு தேர்தலில் பிரபல சோதிடர்கள் ராஜீவ் காந்தி மீண்டும் பிரதமராகப் போகிறார் என்று அடித்துச் சொன்னார்கள். 2016ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, "அவர் உடல் நலம் பெற்று பழையபடி வருவார். அதற்குப் பின் நீண்ட காலம் அரசியலில் ஆக்டிவ் ஆக இருப்பார் என்று உறுதியாகச் சொன்னார்கள்.

பொதுாக இப்படி சோதிடம் கூறுவோர் பொதுவான சில கூற்றுகளைக் கையாள்வது வழக்கம். "நாட்டில் சில இடங்கள் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும். தேர்தலில் கலவரம் நிகழக் கூடும். முக்கிய தலைவர் மரணமடைவார். போர் மூளக் கூடும்" என்று சொல்லி வைப்பார்கள்.

இவ்வளவு பெரிய, வெவ்வேறு தட்பவெப்பம் கொண்ட இந்தியாவில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு பகுதியில் எப்படியாவது புயலோ, மழையோ, வெள்ளமோ, பூகம்பமோ, வறட்சியோ நேரத்தான் செய்யும். அப்படி நடந்ததைச் சுட்டிக் காட்டி, "நான் அப்போதே சொன்னேன்" என்று விளம்பரம் தேடிக் கொள்வார்கள்.

தேர்தல் என்றாலே கலவரம்தானே! அப்புறம் என்ன பெரிய கலவரம் நடந்துவிடப் போகிறது? ஏராளமான தலைவர்கள் கிழவர்களாக இருப்பதால், அவர்களில் யாராவது ஒருவருக்கு ஏதாவது நேரக் கூடும் என்பதை எல்கேஜி சிறுவன் கூட கூறிவிடுவான். அப்படியும் நடந்துவிடும். சோதிடர்களுக்கு அது போதுமே, நான் அப்போதே கூறினேனே என்று மாரைத் தட்டிக் கொள்வார்.

இவர்களில் யாருமே கொரானோ பற்றிய மறைமுகமாகவோ, பூடகமாகவோ கூறியதாக எந்தப் பதிவும் 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இல்லை. குறிப்பாக முக்கிய தலைவர்களைப் பற்றி எந்த சோதிடமும் கூறியதாகத் தகவலே இல்லை. அவர்களுக்குத் தெரியாதா, இவர் இல்லாவிட்டால், அவர்.. இப்படி இவர்களில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். நம்ம பிசினஸ் ஓடட்டும் என்பதுதானே அவர்களது எண்ணம்!

பழைய நாடகம் ஒன்றில் ஒரு பெண்ணுக்குப் பிரசவசம் நடக்கப் போவதற்கு முன் சோதிடர் கூறுவார். "உங்களுக்கு ஆண் பிள்ளை பிறக்கும். இல்லையென்றால் பெண் குழந்தை பிறக்கும்" என்று துல்லியமாகக் கணித்து கல்லா கட்டுவார்.

"என்ன சார் சோதிடம் பார்க்கக் கூடாதா? பல்லி சத்தத்தை வைத்து பலன் பார்க்கிறார்கள். கிளி ஜோதிடம் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, நமது சோதிடங்கள் எல்லாமே சந்திரன், சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று இயற்கையைச் சார்ந்துதானே கணிக்கப்படுகின்றன.." என்றார் அவர்.

அதற்கு நாம், "விலங்குகள், பறவைகள் சொல்லும் சோதிடத்தை நாம் எங்கே கவனிக்கிறோம்..." என்றோம். அதற்கு அவர், "வாங்க வழிக்கு, சோதிடத்தில் நம்பிக்கை வந்துவிட்டதா.." என்று கேட்டார்.

"இந்த சோதிடம் ஓர் அறிவியல்... கேளுங்கள்..." என்று கூறிவிட்டு தொடர்ந்தோம். "15 ஆண்டுகளுக்கு முன் சுநாமி தாக்கியதே அவ்வளவு கடல் அலையில் ஒரு மீனாவது கிடைத்ததா? சரி போகட்டும், மனிதர்கள் மட்டும் இறந்தனர். கடலோரம் உலாவும் எந்த விலங்கும் பறவையும் சாகவில்லையே.." என்றதும் அவரது புருவம் உயர்ந்தது.

தொடர்ந்தோம் : "இயற்கைச் சீற்றங்கள், மாறுபாடுகளை நம்மை விட விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எல்லாம் நுட்பமாக அறிந்து பாதுகாப்பான இடத்துக்குப் போய்விடும். மனிதர்கள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

கி.பி. 373ம் ஆண்டில் கிரேக்க நாட்டின் ஹெலிஸ் (Helice) நகரிலிருந்து ஒரு நாள் திடீரென்று ஆடு மாடு, குரங்கு, எலி, பல்லி என்று ஒரு உயிரினமும் நிற்காமல் திடீரென்று வெளியேறிவிட்டன. அப்புறம் அந்த நகரமே பூகம்பத்தில் புதையுண்டது. இதை நேஷனல் ஜியாகிரபி இதழில் மரியான் மோட் (Maryann Mott) என்ற அறிவியலாளர் எழுதியிருக்கிறார்.

இதைப் போல் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகிறார். 1975ம் ஆண்டு சீனாவில் ஹெய்சங் (Haicheng) என்ற நகரில், பன்றிகள் தாறுமாறாக வெறிபிடித்தபடி இங்கும் அங்கும் ஓடின. இதைப் பார்த்த விஞ்ஞானிகள் ஏதோ நிகழப் போகிறது என்று ஆராய்ந்தபோது, 7.3 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் தாக்கியது.

ஏன் 2003ம் ஆண்டில் ஜப்பானில், இதைப் போல் ஏராளமான நாய்கள் வேகமாக ஓடியதை அடுத்து பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் ஆராய்ந்தனர். பூகம்பம் வருவதைக் கண்டு அதிர்ந்தனர்.

2004, டிசம்பர் 26ம் தேதி காலையில் மாமல்லபுரம் அருகே ஒரு கோயில் குளத்தில் மீன்கள் திடீரென்று துள்ளித் துள்ளி எழுந்தன. அங்கிருந்தவர்கள் "ஏதோ தெய்வக் குற்றம்" என்றுதான் நினைத்தார்களே தவிர, முதலில் பூகம்பம் அதையடுத்து சுநாமி வரப் போகிறது என்று உணரவில்லை.

அந்தக் காலத்தில் தவளை தாளம் போடுது, தும்பி தாழப் பறக்குது.. என்று பாடல் வரும். அது மழைக்கான அறிகுறி என்று பாட்டு முடிக்கும்.

இப்படியெல்லாம் சோதிடம் அறிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு வேறேதோ சோதிடத்தில் இந்த ஆண்டு இப்படி நடக்கும் என்று நாடி சோதிடம், சோழி சோதிடம், என்று ஏராளமான வழிகளில் மக்களிடம் வியாபாரம் செய்கிறார்கள்" என்று விவரித்தோம்.

இப்படி விளக்கி முடித்ததும் நண்பர் கேட்டார். "மு.க. அழகிரி எந்தக் கட்சியைத் தொடங்குவார், எங்கே சேருவார் என்று சோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியுமா?" என்று கேட்டார்.

(இதழியலில் 1979ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பா. கிருஷ்ணன் மூத்த ஊடகவியலாளர். பல இதழ்களிலும் ஊடகங்களிலும் எழுதி வருகிறார். தொலைக்காட்சி அலைவரிசைகளின் விவாதங்களிலும் பங்கேற்கிறார்.)

English summary
Here is Writer PaKi's Article on Jothidam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X