"திமுக - அதிமுக கூட்டணி?" ரகசியத்தை உடைத்த எம்ஏ பேபி! சரியாக எடப்பாடி போட்ட அந்த ஒரு போஸ்ட்! பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் தரப்பு போராடிக் கொண்டு இருக்கும் சூழலில், திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைக்கப் போவதாக இணையத்தில் தகவல் வெளியாகி பகீர் கிளப்பியது. இதற்கிடையே அதிமுக- திமுக கூட்டணிக்கு தங்களிடம் கூட ஆதரவு கோரப்பட்டதாக சிபிஎம் தலைவர் சொன்னதாகவும் தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக முக்கியமான விளக்கம் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வந்த ஆறு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் புதிய அரசு அமையவில்லை. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. 'மேஜிக் நம்பரை' எட்ட விஜய் ஒருபுறம் பெரும் போராட்டமாக நடத்தி வருகிறார்.

திமுக- அதிமுக கூட்டணி
இதற்கிடையே மறுபுறம் எதிரும் புதிருமான கட்சிகள் கைகோர்க்கப் போவதாகக் கடந்த இரு நாட்களாகத் தகவல்கள் பரவின. அதாவது தமிழ்நாட்டில் கடந்த 56 ஆண்டுகளாகவே திமுகவும் அதிமுகவும் நேர் எதிராகவே பயணித்து வந்துள்ளது. இந்தச் சூழலில் தான் திமுக- அதிமுக இடையே கூட்டணி உருவாகப் போவதாகத் தகவல்கள் வெளியானது. அப்படி விஜய்க்கு எதிராக திமுக, அதிமுக கைகோர்த்தால் அது மிகப் பெரிய அரசியல் நிகழ்வாகவே இருக்கும்.
அதிமுக உடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என திமுக சொன்னாலும் கூட இந்த தகவல் தொடர்ந்து பரவி டென்ஷனை கிளப்பியது. இதற்கு நடுவே திமுக- அதிமுக இணைந்து கூட்டணியை அமைக்க முயன்றதாகவும் அதற்கு தங்களிடம் கூட ஆதரவு கோரப்பட்டதாக சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறியதாக இணையத்தில் தகவல் பரவியது. இது மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்தது.
விளக்கம்
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவிய 'திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போகின்றன' என்ற செய்தியை எம்.ஏ.பேபி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதாக வந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே. அதில் உண்மையில்லை" என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பூகம்பம்
ஆனால், அதே மூச்சில் மற்றொரு 'பூகம்பத்தை' அவர் கிளப்பியுள்ளார். அதாவது அவர், "அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மைதான். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுகவை மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர். ஆனாலும், அவர்கள் யாரிடம் ஆதரவு எதிர்பார்த்தார்கள், யாரிடம் பேரம் பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அதிமுக தலைமையில் ஒரு அரசு அமைய அவர்கள் காய்நகர்த்தியது உண்மை தான்" என எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக- அதிமுக கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு வருவதை இடதுசாரிகள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் மேலும், "தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியைப் பிடிக்க முயன்றால், அதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சிபிஎம் எடுக்கும். எங்களது முழு பலத்தையும் கொண்டு அதை எதிர்த்துப் போராடுவோம்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதேநேரம் இன்று காலை அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று போஸ்ட் போட்டு சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications